டிக்டாக் வீடியோ வெளியிட்டதால் சஸ்பெண்ட் ஆன போலீஸ்: குவியும் பட வாய்ப்புகள்..!
காவல் நிலையத்தில் டிக்டாக் வீடியோ பதிவு செய்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் போலீசுக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
குஜராத்தை சேர்ந்தவர் அர்பிதா சவுத்ரி. இவர் அந்த மாநிலத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள லங்நாஜ் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். சவுத்ரி கடந்த 2019-ஆம் ஆண்டு ஜீலை மாதம் பணியில் இருக்கும்போது, டிக்டாக்கில் ஆடி பாடி வீடியோ ஒன்றை பதிவு செய்து வெளியிட்டார். இதனையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இருப்பினும் டிக்டாக் மீதான மோகம் கொஞ்சம் கூட தணியவில்லை. சஸ்பெண்ட் ஆகி இருந்தபோதும் கூட பல டிக்டாக் வீடியோக்களை பதிவு செய்து வெளியிட்டார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் வைரலானது. இதனையடுத்து அவருக்கு, தனியார் ஆல்பம் பாடல்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. அந்த வகையில் அவர் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான குஜராத்தி இசை ஆல்பத்தில் நடித்தார். அந்த ஆல்பம் லட்சக்கணக்கான மக்களை சென்றடைந்தது.
இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்த 4 இசை ஆல்பங்களில் நடித்தார் சவுத்ரி. இதனால் குஜராத் மட்டுமல்லாது வட மாநிலங்களிலும் சவுத்ரி பிரபலமானார். இந்நிலையில் தற்போது அவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள காதி காவல் நிலையத்தில் பணிபுரியும் சவுத்ரி இது குறித்து கூறும்போது
“ சிறு வயதில் இருந்தே எனக்கு கதாநாயகியாக நடிக்க வேண்டும், மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. ஆனால் எனது தந்தை என்னை காவலராக பணிபுரிய நிர்பந்தித்தார். நானும் வேறு வழியில்லாமல் காவலராக மாறி விட்டேன். எனது தந்தையின் ஆசையை நிறைவேற்றி விட்டேன். தற்போது எனக்கான கனவில் பயணித்து கொண்டிருக்கிறேன். ஒரு கனவுக்காக இன்னொரு கனவை விட்டுக்கொடுக்க முடியாது. குஜராத்தி படங்களில் நடிப்பதற்கு ஏராளாமான வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அந்தப் படங்களில் நடிப்பதற்கு மேலதிகாரிகளிடம் அனுமதி கேட்டுள்ளேன். அவர்கள் அனுமதி வழங்கிய பின்னர் திரைப்படங்களில் நடிப்பேன்” என்று கூறினார்.