இந்தியாவில் இருவருக்கு கொரனா அறிகுறி?: தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிப்பு!
இந்தியாவில் இருவருக்கு கொரனா வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவிலிருந்து மருத்துவப் படிப்பை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பிய ராஜஸ்தானின் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒருவருக்கு கொரனா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ரகு சர்மா தெரிவித்துள்ளார். அவரது ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் தற்போது அவர் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
சீனாவிலிருந்து ராஜஸ்தான் திரும்பிய மேலும் 18 பேரையும் தீவிரமாக கண்காணிக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நோய்த்தொற்றைக் கண்டறிய விமான நிலையங்களில் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என ராஜஸ்தானின் சுகாதாரத் துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
சீனாவில் இருந்து திரும்பிய பீகாரின் சாப்ரா என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கொரனா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பதாகக் கூறப்பட்டதை அடுத்து அவர் பாட்னா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.