பாகிஸ்தான் சிறைகளில் 74 ராணுவ வீரர்கள்: சுஷ்மா ஸ்வராஜ் தகவல்
54 போர் கைதிகள் உட்பட, காணாமல் போன 74 ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் சிறைகளில் இருப்பதாக நம்பப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்து மூலம் பதில் அளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இந்த தகவலைத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் உள்ள இந்தியாவை சார்ந்த போர் கைதிகளை மீட்க, இந்திய அரசாங்கம் ராஜதந்திர வழிகளில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் பாகிஸ்தான் தனது பிடியில் இந்திய போர் கைதிகள் இருப்பதை இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை.இன்னொரு கேள்விக்குப் பதிலளித்த சுஷ்மா ஸ்வராஜ், பாகிஸ்தானின் பிடியில் 301 இந்திய மீனவர்களும் 897 படகுகளும் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் ஜனவரி 1, 2017 வரை, 55 பாகிஸ்தான் மீனவர்கள் மற்றும் 287 பாகிஸ்தான் சிவில் கைதிகள் என இந்தியாவால் கைது செய்யப்பட்டு சிறைகளில் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.