சுஷ்மா சுவராஜின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள் 

சுஷ்மா சுவராஜின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள் 
சுஷ்மா சுவராஜின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள் 

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் கடைசி ஆசையை அவரது மகள் நிறைவேற்றியுள்ளார். 

உடல்நல குறைவால் முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி உயிரிழந்தார். இவர் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடிய ஹரிஸ் சால்வே இடம் உரையாடினார். அப்போது சுஷ்மா, கூறியது குறித்து ஹரிஸ் சால்வே நெகிழ்ச்சியாக தெரிவித்திருந்தார். 

அதில், “நான் ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி இரவு 8.50 மணிக்கு சுஸ்மா அவர்களிடம் பேசினேன். அது மிகவும் உணர்ச்சிபூர்வமானது. அவர் எனக்கு கொடுக்க வேண்டிய ஒரு ரூபாய் கட்டணத்தை தர வேண்டும் என தெரிவித்தார். நான் கட்டாயம் வந்து எனது கட்டணத்தை வாங்கிக் கொள்கிறேன் என்றேன். அவர் என்னை அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு வந்து வாங்கிக்கொள்ளுமாறு கூறினார்” எனத் தெரிவித்தார். எனினும் ஆகஸ்ட் 6ஆம் தேதி இரவே சுஷ்மா சுவராஜ் உயிரிழந்தார். இதனால் ஹரிஸ் சால்வேவிற்கு அவர் ஒரு ரூபாய் நாணயத்தை வழங்க முடியாமல் போனது. 

இந்நிலையில் நேற்று வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேவிற்கு அவருடைய கட்டணமான ஒரு ரூபாய் நாணயத்தை சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி கொடுத்தார். இதனை சுஷ்மா சுவராஜின் கணவர் சுவராஜ் கௌசல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,“சுஷ்மா சுவராஜின் கடைசி ஆசையை பன்சூரி நிறைவேற்றியுள்ளார். அவர் ஹரிஷ் சால்வேயை அழைத்து குல்பூஷண் ஜாதவ் வழக்கிற்கான அவருடைய கட்டணமான ஒரு ரூபாயை அளித்தார்” எனப் பதிவிட்டுள்ளார். 

முன்னதாக குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜராக ஹரிஷ் சால்வேயை அப்போதையை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நியமித்தார். சுஷ்மா சுவராஜின் வேண்டுகோளுக்கு இணங்க ஹரிஸ் சால்வே ஒரு ரூபாய் கட்டணத்திற்கு இந்த வழக்கில் வாதாட ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com