லாகூரில் எப்பொழுது வேண்டுமானாலும் இந்தியா நுழையும் - பாகிஸ்தானுக்கு ஆர்.எஸ்.எஸ் எச்சரிக்கை
எப்பொழுது வேண்டுமானாலும் இந்திய ராணுவம் லாகூருக்குள் நுழையும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ் குமார் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘இந்தியாவின் தற்போதையை நிலை’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.
இந்திரேஷ் குமார் பேசுகையில், “சர்ஜிக்கல் தாக்குதல் என்பது லாகூர் நகருக்குள் இந்தியா எப்பொழுது வேண்டுமானாலும் நுழைய முடியும் என்று பாகிஸ்தானுக்கு உணர்த்தும் செய்தி. எச்சரிக்கையுடன் இருங்கள். அகண்ட பாரதமே என்னுடைய கனவு. ஒரு வீட்டை நாக்பூரிலும், மற்றொரு வீட்டை லாகூர் அல்லது ராவல்பிண்டியில் கட்ட வேண்டும். என்னுடைய இறுதி மூச்சை அகண்ட பாரதத்தில் விட வேண்டும் என கடவுகளை வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.
மேலும் காஷ்மீரில் கூட்டணி முறிவு குறித்து அவர் பேசுகையில். “ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சியில் இருந்த போது 300க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 3-4 முக்கிய நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டு காஷ்மீரில் ஆட்சி அமைத்தோம். சிறப்பாக சிலவற்றை செய்தோம். காஷ்மீர் அரசின் உதவி இல்லாமல் சர்ஜிக்கல் தாக்குதலை செய்திருக்க முடியாது” என்றார்.