“பிரதமர் மோடி உண்மையில் சரண்டர் மோடி” - சர்ச்சையான ராகுல் ட்வீட்
எல்லை விவகாரத்தில் நரேந்திர மோடி அல்ல அவர் சரண்டர் மோடி எனக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆங்கிலத்தில் Surrender என வர வேண்டும், ஆனால் ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டரில் பதிவில் Surender எனப் பதிவிட்டுள்ளார். இதனால் ட்விட்டர் வாசிகள் ராகுலின் ஆங்கிலப் புலைமையைக் கேள்வி கேட்டுத் தொடர்ந்து நச்சரித்து வருகின்றனர்.
கிழக்கு லடாக் பகுதியில் நடந்த இந்திய- சீன ராணுவ வீரர்களுக்கிடையேயான மோதலில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி உள்பட 20 பேர் உயிரிழந்தனர். இது குறித்து பிரதமர் மோடி அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி விவாதித்தார். மேலும், "இந்தியாவின் ஒரு அங்குலத்தைக் கூட சீனா கைப்பற்றவில்லை. நம் வீரர்களின் தியாகம் வீண் போகாது" எனக் கூறியிருந்தார். ஆனால் இந்தப் பேச்சுக்கு ராகுல் காந்தி தொடர்ந்து எதிர்வினையாற்றி வந்தார்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக மத்திய அரசைத் தொடர்ந்து விமர்சித்துவரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்திய அரசு தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்படவில்லை என்றும், சீனா திட்டமிட்டு இந்திய ராணுவ வீரர்களைக் கொலை செய்துள்ளது எனக் குற்றம் சாட்டினார்.இந்நிலையில் இன்று ஜப்பான் டைம்ஸ் எனும் நாளேட்டில் வெளிவந்துள்ள கட்டுரையைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.
அந்தக் கட்டுரையில் இந்தியாவின் அமைதியை விரும்பும் கொள்கை, சீனாவின் ஆவேசமான போக்கைத் தடுப்பதில் தோல்வி அடைந்துவிட்டது. 2-வது முறையாகச் சீனா இந்தியாவின் பகுதியை ஆக்கிரமித்துள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவின் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இனிமேலாவது இந்தியா தனது கொள்கையை மாற்றுமா என வெளி வந்திருக்கிறது. இந்தக் கட்டுரையை வெளியிட்டுள்ள ராகுல் காந்தி அதில், “பிரதமர் நரேந்திர மோடி உண்மையில் சரண்டர் மோடி” எனச் சாடியுள்ளார்.