ஒரே நாளில் இத்தனை நிகழ்ச்சிகளா..! சூரத்தில் வைர சந்தையை திறந்து வைத்த பிரதமர் மோடி!

குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடிpt web

குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி காலை சூரத் விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து சூரத் வைர சந்தையைப் பிரதமர் தொடங்கி வைத்தார். அதன்பின், வாரணாசி செல்லும் பிரதமர் மாலை, 3:30 மணிக்கு, நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையில் பங்கேற்கிறார். மாலை 5.15 மணிக்கு நமோ படித்துறையில் காசி தமிழ் சங்கமம் 2023-ஐ தொடங்கி வைக்கிறார்.

சூரத் விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடம் 1200 உள்நாட்டு பயணிகளையும் 600 சர்வதேச பயணிகளையும் ஒரே நேரத்தில் கையாளும் திறன் கொண்டது. இது மேலும் 3000 பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட வகையிலும், வருடாந்திர பயணிகள் கையாளும் திறனை 55 லட்சமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த முனைய கட்டிடம், சூரத் நகரத்தின் நுழைவாயிலாக இருப்பதால், அதன் உள்ளூர் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது, இதன் சாராம்சம் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் பிரதிபலிக்கும் வகையில் பார்வையாளர்களுக்கு ஒரு சிறந்த உணர்வை உருவாக்குகிறது

மேம்படுத்தப்பட்ட முனைய கட்டடத்தின் முகப்பு, சூரத் நகரத்தின் 'ராண்டர்' பிராந்தியத்தின் பழைய வீடுகளின் வளமான மற்றும் பாரம்பரிய மரவேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. இது பயணிகளின் அனுபவத்தை வளப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத்தில் இரட்டை இன்சுலேட்டட் கூரை அமைப்பு, எரிசக்தி சேமிப்பிற்கான அமைப்புகள், குறைந்த வெப்ப அலகு, மழை நீர் சேகரிப்பு அமைப்பு, நீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பு மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை நிலச் சீரமைப்பு மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையத்திற்கு பயன்படுத்துதல் போன்ற பல்வேறு நிலைத்தன்மை அம்சங்கள் உள்ளன. இந்நிலையில் இன்று காலை விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத்தை பிரதமர் திறந்து வைத்தார்.

இதை தொடர்ந்து சூரத் டைமண்ட் போர்ஸ் எனப்படும் சூரத் வைரச் சந்தையையும் பிரதமர் திறந்து வைத்தார். இது சர்வதேச வைரம் மற்றும் நகை வணிகத்திற்கான உலகின் மிகப்பெரிய மற்றும் நவீன மையமாக இந்த சந்தை அமையும் என்றும் கடினமான மற்றும் மெருகூட்டப்பட்ட வைரங்கள் மற்றும் நகைகள் இரண்டையும் வர்த்தகம் செய்வதற்கான உலகளாவிய மையமாக இது இருக்கும். இறக்குமதி - ஏற்றுமதிக்கான அதிநவீன 'சுங்க அனுமதி மாளிகை'யை இது கொண்டிருக்கும்; சில்லறை நகை வணிகத்திற்கான நகை வணிக வளாகம் மற்றும் சர்வதேச வங்கி மற்றும் பாதுகாப்புப் பெட்டகங்களின் வசதி இதில் உள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது

திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அவர் கூறுகையில், “இன்று உலகின் முதல் 10 வளரும் நகரங்களில் சூரத் இடம்பிடித்துள்ளது. சூரத்தின் தெரு உணவு, திறன் மேம்பாட்டுப் பணிகள் என அனைத்தும் பிரமிக்க வைக்கிறது. சூரத் ஒரு காலத்தில் 'சன் சிட்டி' என்று அழைக்கப்பட்டது. ஆனால் இன்று இங்குள்ள மக்கள் தங்கள் கடின உழைப்பால் இதை 'வைர நகரமாக' உருவாக்கியுள்ளனர்.

இன்று சூரத் மக்களுக்கும் இங்குள்ள வணிகர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கும் மேலும் இரண்டு பரிசுகள் கிடைக்கின்றன. சூரத் டயமண்ட் பர்சா இந்திய வடிவமைப்பு, இந்திய வடிவமைப்பாளர்கள், இந்திய பொருட்கள் மற்றும் இந்திய கருத்துகளின் சக்தியைக் காட்டுகிறது. இந்த கட்டடம் புதிய இந்தியாவின் புதிய ஆற்றல் மற்றும் புதிய உறுதிப்பாட்டின் சின்னமாகும்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com