'நம் கரங்களில் ரத்தக்கறை கூடாது!'- வேளாண் சட்டங்கள்.. உச்சநீதிமன்றம் உதிர்த்த 6 கருத்துகள்

'நம் கரங்களில் ரத்தக்கறை கூடாது!'- வேளாண் சட்டங்கள்.. உச்சநீதிமன்றம் உதிர்த்த 6 கருத்துகள்

'நம் கரங்களில் ரத்தக்கறை கூடாது!'- வேளாண் சட்டங்கள்.. உச்சநீதிமன்றம் உதிர்த்த 6 கருத்துகள்
Published on

வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள், விவசாயிகள் போராட்டத்துக்கு தடை கோரும் மனுக்களும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது. அப்போது, வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு கையாண்ட விதம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, 'தேவைப்பட்டால் 3 வேளாண் சட்டங்களையும் அமல்படுத்த தடை விதிக்கப்படும்' என எச்சரித்தார்.

மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்திற்கு தடைவிதிக்கவும் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேவேளையில், 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடியாது என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு கொண்டுள்ளது.

இந்த விசாரணையின்போது, உச்ச நீதிமன்றம் தெரிவித்த கவனிக்கத்தக்க 6 கருத்துகள்:

> ''போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு என்னென்ன நடவடிக்கை எடுத்தது? போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எடுத்ததாக தெரியவில்லை.''

> ''பொறுப்புணர்வு இருந்தால் சட்டங்களை அமல்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக கூறுங்கள். இப்போதைக்கு நம் ஒவ்வொரிடமும் பொறுப்பு இருக்கிறது. ரத்த வெள்ளம் பாயாமல் பார்த்துக்கொள்வதில் உச்ச நீதிமன்றம் உள்பட நம் ஒவ்வொருவருக்குமே பொறுப்பு உண்டு. நம் கரங்களில் ரத்தக்கறை எதுவுமே படியக் கூடாது. வன்முறைக்கு இடமளிக்கவே கூடாது. ஒரு தவறான சம்பவம் கூட வன்முறையை வெடிக்கச் செய்துவிடும்."

> ''நாங்கள் வேளாண்மை மற்றும் பொருளாதார நிபுணர்கள் இல்லை. வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்திட நீங்கள் முடிவெடுக்கிறீர்களா? அல்லது நாங்கள் உத்தரவிடவா? இங்கே கெளரவப் பிரச்னை எப்படி வந்தது?''

> "போராட்டம் நாளுக்கு நாள் மோசமடைகிறது, ஏராளமானோர் உயிரிழக்கின்றனர். தற்கொலைகளும் உயிரிழப்புகளும் நேரிடுவதால் மத்திய அரசு உடனடியாக கவனிக்க வேண்டும்.''

> "இந்தச் சட்டங்களைக் கொண்டுவருவதற்கு முன்பு எந்த வகையான ஆலோசனை நடவடிக்கைகளை எடுத்தீர்கள் என்று தெரியவில்லை. பல மாநில அரசுகளும் எதிர்ப்பு காட்டுகின்றன. பெரும்பான்மையானவர்கள் இந்தச் சட்டங்களை நல்லது என்று கூறும்பட்சத்தில், அதை ஒரு கமிட்டியிடம் சொல்லட்டும். சுமுகத் தீர்வுதான் எங்களது நோக்கம்"

> "போராடுவதற்கு உரிமை உண்டு. காந்திஜியின் சத்யாகிரகம் போல போராடுவதற்கு உரிமை உண்டு. இந்தப் போராட்டத்தை அமைதியாக நடத்துங்கள்."

இதனிடையே, விவசாயிகளுடன் மத்திய அரசு ஏற்கெனவே நடத்திய 8 சுற்று பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவுற்ற நிலையில், 9ஆவது சுற்று பேச்சு 15-ஆம் தேதி நடைபெற உள்ளது. புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறப்போவதில்லை என்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com