அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது. இதனால் உச்சநீதிமன்றத்தில் நீண்ட காலமாக நடந்து வந்த அயோத்தி வழக்கு ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் மேலும் 4 முக்கிய வழக்குகளுக்கும் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது
சபரிமலை:
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதித்து உச்சநீதிமன்றம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட 65 சீராய்வு மனுக்கள் மீதான வழக்கில் இன்று காலை உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயுடன் நீதிபதிகள் ரோஹிண்டன் நரிமன், ஏ எம் கன்வில்கர், டிஒய் சந்திரசூட், மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் இடம்பெற்றனர். இந்நிலையில், இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
ரஃபேல் :
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடக்கவில்லை என்ற தீர்ப்பின் மீது தொடரப்பட்ட சீராய்வு மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ரஃபேல் வழக்கில் சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கே.எஸ்.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் கொண்ட அமர்வு சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது.
ராகுல் காந்தி:
நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து எதிர்காலத்தில் ராகுல் காந்தி கவனமுடன் பேச வேண்டும் என உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது. ரஃபேல் ஊழல் வழக்கில், உச்சநீதிமன்றம் பிரதமர் மோடியை, ‘காவலாளியே திருடன்’ என கூறியதாக ராகுல் காந்தி பேசியதற்கு எதிராக பாஜக எம்பி மீனாட்சி லெக்வி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் நீதிபதிகள் இந்த கருத்தினை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, உச்சநீதிமன்றம் ராகுல் காந்திக்கு எதிரான வழக்கை முடித்து வைத்தது
தென் பெண்ணை:
தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை என்று கருத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அத்துடன் தென்பெண்ணையின் கிளை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்த தமிழகத்தின் மனுவை நீதிபதி லலித் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது.