அயோத்தி வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஜனவரி 4 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி பகுதியின் உரிமை தொடர்பான வழக்கு நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் சமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கியது.
இதை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, வழக்கு விசாரணை தேதி குறித்து ஜனவரி மாதம் முடிவெடுக்கப்படும் என உத்தரவிட்டது.
இதனிடையே, அயோத்தி வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றும் திட்டமிட்டபடி ஜனவரி முதல் வாரத்தில்தான் விசாரிக்கப்படும் என்று நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
இதனிடையே, நீதிமன்றம் தாமதப்படுத்தி வருவதால், அயோத்தியில் உடனடியாக ராமர் கோயில் கட்ட பாஜக அரசு அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று சிவசேனா உள்ளிட்ட சில கட்சிகளும், ஆர்.எஸ்.எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், நீதிமன்ற உத்தவிரவின் படி செயல்படுவோம் என்று பாஜக கூறி வருகிறது.
இந்த வழக்கு தாமதமாவதற்கு காங்கிரஸ் கட்சி மறைமுகமாக செயல்படுகிறது என்றும் பாஜக குற்றம்சாட்டி வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கபில் சிபில் ஆஜராவதை சுட்டிக்காட்டி இந்தக் குற்றச்சாட்டை பாஜக வைக்கிறது. இதோடு, அயோத்தியில் சிவசேனா மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் பேரணிகளை நடத்தியது. இதனால், அயோத்தியில் ஒருவித பதட்டமான சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், அயோத்தி வழக்கு ஜனவரி 4ம் தேதி விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்படுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது. இந்த அமர்வு அலகாபாத் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 14 மனுக்களையும் விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

