’நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் விவரங்களை வெளியிட வேண்டும்..’ - உச்ச நீதிமன்றம் உத்தரவு
பீகார மாநில சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள சூழலில் தேர்தலுக்கு முன்பு பிகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின் போது சுமார் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் 2025ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதோடு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் தன்னிச்சையான முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் உச்சநீதிமன்றத்தை நாடினர்.
இவ்வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் உள்ளிட்ட இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
9 முக்கிய உத்தரவுகள்..
இன்றைய விசாரணையின் போது முக்கியமான சில உத்தரவுகளை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதில்,
1. வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையின் போது 2025ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் விவரங்களை இணையத்தில் வெளியிட வேண்டும்.
2. இணையத்தில் வெளியிடக்கூடிய நடவடிக்கை நான்கு நாட்களுக்குள் செயல்படுத்த வேண்டும்.
3. அதில் மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கப்பட்டுள்ளனர்? அவர்கள் யார்? நீக்கப்பட்ட இறந்தவர்களின் எண்ணிக்கை? நீக்கப்பட்ட புலம் பெயர்ந்த வாக்காளர்களின் எண்ணிக்கை? உள்ளிட்டவை குறிப்பிட வேண்டும்.
4. மாவட்ட வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர் விவரங்கள் மாவட்ட தேர்தல் அதிகாரியில் வலைதளத்தில் இடம்பெற வேண்டும்.
5. அதிகபட்ச புழக்கத்தில் உள்ள உள்ளூர் மொழி செய்தித்தாள்களில் (Leading Local News Papers) விளம்பரம் அளிக்கப்பட வேண்டும்.
6. மத்திய அரசின் தூர்தர்ஷன் மற்றும் பிற செய்தி சேனல்கள் மூலம் நீக்கப்பட்ட வாக்காளர் விவரங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து ஒளிபரப்ப வேண்டும்.
7. மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சமூக ஊடக அதிகாரப்பூர்வ கணக்குகள் இருந்தால் அங்கும் இது குறித்தான அறிவிப்பை வெளியிட வேண்டும்.
8. நீக்கப்பட்ட 67 லட்சம் வாக்காளர்களின் வாக்குச்சாவடி வாரியான பட்டியலை பஞ்சாயத்து அலுவலகங்கள் மற்றும் தொகுதி மேம்பாட்டு அலுவலகங்களில் உள்ள பலகையில் பிரசுரிக்க வேண்டும்.
9. மிக முக்கியமாக, வாக்காளர் இறுதிப்பட்டியலில் சேர்க்க விரும்புவோர் அவர்களது கோரிக்கையை வழங்கும்போது ஆதார் அட்டைகளையும் ஆவணங்களாக வழங்கலாம் என விளம்பரம் செய்ய வேண்டும் என கூறி ஆகஸ்ட் 19ம் தேதிக்குள் செயல்படுத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 22-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.