அதானி குழுமம் மீதான புகார்: ஹிண்டன்பர்க்அறிக்கை குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

அதானி குழுமம் மீதான புகார்: ஹிண்டன்பர்க்அறிக்கை குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
அதானி குழுமம் மீதான புகார்: ஹிண்டன்பர்க்அறிக்கை குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருக்கிறது.

அதானி குழுமத்தின் அசுர வளர்ச்சி தொடர்பான விவாதம் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. நரேந்திர மோடி அரசு அதானி குழுமத்திற்கு ஆதரவாக செயல்பட்டதன் காரணமாக கௌதம் அதானி உலகின் மிகப்பெரிய செல்வந்தராக குறுகிய காலத்தில் வளர்ந்தார் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையை உச்சநீதிமன்றமே கண்காணித்து விசாரணையை நடத்தவேண்டும் என வழக்கறிஞர் எம்.எல் சர்மா உள்ளிட்ட சிலர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

எம்.எல் சர்மாவின் மனுவில், “குறுகிய கால பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள், பங்குகளை வாங்கி அவற்றை குறுகிய காலத்திலேயே விற்றுவிடுகின்றன. பின்னர் அந்த பங்குகளின் விலை குறைந்தபிறகு மீண்டும் அந்த நிறுவனங்களே அவற்றை வாங்கிக்கொள்கின்றன. இவ்வாறு அப்பாவி முதலீட்டாளர்கள் ஏமாற்றப்படுகின்றனர்.

இது பங்குச்சந்தையில் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக பங்குச்சந்தையில் அதானி குழும பங்குகளின் விலையை செயற்கையாக குறைத்தன. இதனால் குறுகிய கால பங்கு வர்த்தக நிறுவனங்களின் நிர்வாகங்களில் பெரும் குளறுபடிகள் இருப்பதாக தோன்றுகிறது. எனவே இதனை சட்டத்திற்கு புறம்பானது என அறிவிப்பதுடன், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு பதிந்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். மேலும், அதானி குழும பங்கு வீழ்ச்சிக்கு காரணமான ஹிண்டன்பர்க் நிறுவனம் குறித்தும் விசாரணை நடத்தவேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அதானி குழுமம் மீதான ஹிண்டர்பர்க் அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து வெள்ளிக்கிழமை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருக்கிறது. சந்திரசூட், நரசிம்மா, பர்திவாலா கொண்ட அமர்வு இந்த வழக்கை நாளை அதானி மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்த விஷால் திவாரி என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்குடன் சேர்த்து விசாரிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் தலையீடு எந்தவகையில் இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com