ஆபத்தான முன்னுதாரணம்!- POCSO கீழான பாலியல் வழக்கில் மும்பை ஐகோர்ட் தீர்ப்பு நிறுத்திவைப்பு

ஆபத்தான முன்னுதாரணம்!- POCSO கீழான பாலியல் வழக்கில் மும்பை ஐகோர்ட் தீர்ப்பு நிறுத்திவைப்பு
ஆபத்தான முன்னுதாரணம்!- POCSO கீழான பாலியல் வழக்கில் மும்பை ஐகோர்ட் தீர்ப்பு நிறுத்திவைப்பு

போக்சோ (POSCO) சட்டம் தொடர்பான மும்பை உயர் நீதிமன்றம் அளித்த சர்ச்சைக்குரிய தீர்ப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த 39 வயதான ஒரு நபர் ஒருவர், 12 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து வந்து, அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதுகுறித்து போக்சோ வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்துவந்தது.

இது தொடர்பான வழக்கை, விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா கனேடிவாலா, ``பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நோக்கத்துடன் ஒருவரை ஆடை இல்லாத நிலையில், உடலோடு உடல் தொடுவது போல் தொடர்பு கொண்டால் மட்டுமே அது போக்சோ சட்டத்தின் கீழான பாலியல் வன்கொடுமையாக எடுத்துக்கொள்ளப்படும்.

ஆனால், பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நோக்கத்துடன் ஒருவரை, அவர் அணிந்த ஆடைக்கு மேல் தொட்டு தொந்தரவு செய்தால் அது பாலியல் வன்கொடுமை கிடையாது. அது துன்புறுத்தல் மட்டுமே. போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ், பாலியல் ரீதியிலான நோக்கத்துடன் குழந்தைகளின் தனிப்பட்ட உறுப்புகளைத் தொடுதல், தாக்குதல் நடத்தல் அல்லது குற்றம்சாட்டப்பட்டவரின் தனிப்பட்ட உறுப்புகளை தொடவைப்பது ஆகியவற்றை உள்ளடக்கியது பாலியல் வன்கொடுமை ஆகும்" என்று உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த உத்தரவு கடுமையான விவாதங்களையும், எதிர்ப்புகளையும் ஏற்படுத்தியது. மனித உரிமை அமைப்புகள், பெண்கள் ஆணையம் என பல்வேறு அமைப்புகள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தன. ``இந்த தீர்ப்பு பொதுவாக பெண்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பல்வேறு விதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது மட்டுமல்லாமல், அனைத்து பெண்களையும் கேலிக்கு உள்ளாக்கும் வகையில் அமையும்" என்று அவர்கள் கூறியிருந்தனர்.

மேலும் தேசிய பெண்கள் ஆணையம், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட அட்டர்னி ஜெனரல் கே.கே வேணுகோபால், ``உயர்நீதிமன்ற தீர்ப்பானது, ஒரு பெண்ணின் ஆடைக்கு மேல் பாலியல் துன்புறுத்தல் செய்தும், உடலோடு உடல் தொடவில்லை, ஆடைக்கு மேல் தொட்டு தொந்தரவு செய்தால் அது பாலியல் வன்கொடுமை கிடையாது. என்று கூறி குற்றம்சாட்டப்பட்ட நபரை விடுதலை செய்துள்ளது. இது கவலைக்குரியது. இத்தீர்ப்பு ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்" என்று வாதிட்டார்.

வாதங்களை கேட்ட பிறகு, ``ஐகோர்ட் உத்தரவு முன்னோடியில்லாதது மற்றும் ஆபத்தான முன்னுதாரணத்தை முன்வைக்க வாய்ப்புள்ளது என்று ஏ.ஜி கூறியுள்ளார். ஏ.ஜி வேணுகோபால் இந்த உத்தரவுக்கு எதிராக ஒரு மனுவை தாக்கல் செய்ய நாங்கள் அனுமதிக்கிறோம். மேலும், உயர் நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைக்கிறோம். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com