சர்ச்சையை கிளப்பிய அலகாபாத் நீதிபதி வழங்கிய பாலியல் வன்கொடுமை வழக்கு தீர்ப்பு.. உச்ச நீதிமன்றம் தடை!
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, 11 வயது குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்ய இரு நபர்கள் முயற்சித்தது தொடர்பான வழக்கு ஒன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதாவது, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் அக்குழந்தையின் மார்பு பகுதியைத் தொட்டு பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளனர். ஆனால், இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா, ”பெண்ணின் மார்பு பகுதிகளைப் பிடிப்பது, உடைகளைக் கிழிப்பது பாலியல் வன்கொடுமை குற்றம் அல்ல. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யத் திட்டமிட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை” என தீர்ப்பு வழங்கியிருந்தார். அவருடைய இந்த தீர்ப்பு, பெண்கள் மட்டுமின்றி அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, கண்டனங்களுக்கும் வழிவகுத்தது.
இந்நிலையில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி வழங்கிய சர்ச்சைக்குரிய இந்த தீர்ப்புக்கு தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அலகாபாத் நீதிபதி விதித்த சர்ச்சை தீர்ப்பை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு, ”அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல. கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு.
அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தீர்ப்பு எழுதிய நீதிபதியின் திறன் குறைபாட்டைக் காட்டுகிறது. ஆனால், இந்தக் கருத்தைத் தெரிவிப்பது மிகவும் வேதனையாக உள்ளது. இந்த தீர்ப்பு சட்டக்கோட்பாடுகளுக்கு எதிராகவும், மனிதாபிமானமற்ற அணுகுமுறையை சித்தரிப்பதாகவும் உள்ளது” எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கும், உத்தரப் பிரதேச அரசுக்கும் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளனர்.