“குற்றப்பின்னணி உடையவர்கள்தான் வேட்பாளர்களா?” - அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் காட்டம்
வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை 48 மணி நேரத்தில் அரசியல் கட்சிகள் சமூக வலைதளங்கள் மற்றும் கட்சிகளின் இணையதளங்களில் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டும் எனவும் கடந்த 2018ல் நீதிமன்றம் தந்த தீர்ப்பை கட்சிகள், தேர்தல் ஆணையம் செயல்படுத்தவில்லை எனவும் கூறி பாஜகவின் செய்தி தொடர்பாளர் அஸ்வினி பாட்டியா நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அத்துடன் பல பொதுநல வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன் அமர்வு பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது,
“குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை கடந்த 4 பொதுத்தேர்தல்களிலும் அபாயகரமான அளவு உயர்ந்துள்ளது. வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை 48 மணி நேரத்தில் அரசியல் கட்சிகள் சமூக வலைதளங்கள், கட்சிகளின் இணையதளம் மற்றும் பிராந்திய நாளேடுகளில் வெளியிட வேண்டும். வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்து அரசியல் கட்சிகள் 72மணி நேரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
கட்சிகள் தெரிவிக்காவிடில் உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் முறைப்படி கூற வேண்டும். குற்றப்பின்னணி உடையவர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்த காரணங்களையும் வெளியிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.