“சாதிய பாகுபாடுகளிலிருந்து மக்களை காப்பாற்ற அரசுகள் தவறிவிட்டன” - உச்சநீதிமன்றம்
சாதிய பாகுபாடுகளிலிருந்து மக்களை காப்பாற்ற அரசுகள் தவறிவிட்டதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மனித கழிவுகளை கைகளால் அகற்றும் தொழிலில் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர். ஷா மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. தூய்மை பணிகளில் ஈடுபடும் தொழிலாளிகளுக்கு முகமூடிகள், ஆக்ஸிஜன் சிலிண்டர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் ஏன் வழங்கப்படுவதில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், “ஒவ்வொரு மாதமும் கழிவுகளை அகற்றும் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் நான்கு அல்லது ஐந்து பேர் உயிரிழந்த வண்ணம் உள்ளனர். நாடு சுதந்திரமடைந்து 70 வருடங்களுக்கு மேலாகியும் சாதிய பாகுபாடு இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது, இதிலிருந்து மக்களை காப்பாற்ற அரசுகள் தவறிவிட்டன. நாட்டில் உள்ள எல்லா மனிதர்களும் சமம்தான். ஆனால், அதிகாரிகளுக்கு கிடைக்கும் வசதிகள் தொழிலாளிகளுக்கு கிடைப்பதில்லை. உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இருந்திருந்தால் எத்தனையோ உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.