கிரெடிட் கார்டுக்கான வட்டி உச்ச வரம்பு நீக்கம்.. உச்சநீதிமன்றம் உத்தரவு!
கிரெடிட் கார்டுக்கான பில்லை தாமதமாக செலுத்தினால் 30 சதவிகிதம் வரை வட்டி வசூலிக்கலாம் என தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஒரு வழக்கில் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து பல்வேறு வங்கிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் பீலா திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, கிரெடிட் கார்டில் கடன்பெற்ற வாடிக்கையாளர்களிடம் 45 நாட்களுக்கு வட்டி வசூலிக்கப்படுவதில்லை. முறையாக அல்லது முழுமையாக தொகையை செலுத்தாதவர்களுக்கு மட்டுமே வட்டி விதிக்கப்படுவதாகவும் வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ரிசர்வ் வங்கியின் கீழ்வரும் வங்கிகளுக்கு தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் உச்சவரம்பை நிர்ணயிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது. வங்கிகள் வசூலிக்கும் வட்டி விகிதத்திற்கு உச்ச வரம்பை நிர்ணயிக்கும் அதிகாரம் தேசிய குறைதீர் ஆணையத்திற்கு இல்லை எனத் தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், 2008ஆம் ஆண்டு அந்த ஆணையம் பிறப்பித்த உத்தரவை தள்ளுபடி செய்தனர்.
அதேநேரம், தாமதமாக செலுத்தப்படும் தொகை அல்லது பகுதியாக செலுத்தப்படாத தொகைக்கு அதிக வட்டி விதிக்கக் கூடாது என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.