நிர்பயா வழக்கு: அக்சய் சிங்கின் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்குத் தண்டனை கைதி அக்சய் சிங்கின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
டெல்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி ஓடும் பேருந்தில் மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் ஒருவர் சிறையில் இருக்கும்போது தற்கொலை செய்து கொண்டார். மற்ற நான்கு பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இவர்களின் மரண தண்டனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில் தூக்குத் தண்டனையை சீராய்வு செய்யக்கோரி, அக்சய் சிங் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தூக்குத் தண்டனையை மறுபரிசீலனை செய்ய எந்த முகாந்திரமும் இல்லை எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது. அக்சய் சிங் தவிர மற்ற 3 குற்றவாளிகளின் சீராய்வு மனுக்கள் கடந்த ஆண்டே தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் விரைவில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.