PT EXPLAINER: எத்தனால் கலந்த எரிபொருளால் வாகனங்களுக்கு பாதிப்பா? மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
எத்தனால் கலப்புத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு
20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை விற்பனை செய்வதைக் கட்டாயமாக்கும் மத்திய அரசின் எத்தனால் கலப்புத் திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அக்ஷய் மல்ஹோத்ரா என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்திருந்த அந்த மனுவில், “பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பதால் வாகன இயந்திரங்கள் பாதிக்கப்படுகின்றன. இது பொருந்தாத வாகனங்களில் எரிபொருள் செயல்திறனைக் குறைக்கிறது. பெட்ரோலைவிட எத்தனால் மலிவானதாக இருந்தாலும், எத்தனால் கலவைக்கு ஏற்ப எரிபொருள் விலைகள் குறைக்கப்படவில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட வெளிநாடுகளில், கலப்பு எரிபொருள்கள் (E10, E15, E85) தெளிவாக பட்டியல் இடப்பட்டுள்ளன. தவிர, எத்தனால் இல்லாத பெட்ரோல், அது தேவைப்படும் நுகர்வோருக்கும் கிடைக்கிறது. இருப்பினும், இந்தியாவில் எண்ணெய் பம்புகள் எந்த அறிவிப்புகளும் இல்லாமல் கலப்பு எரிபொருளை விற்பனை செய்கின்றன. ஆகையால், எத்தனால் இல்லாத (E0) பெட்ரோல் அல்லது சரியான லேபிளிங் வழங்காமல், E20 பெட்ரோலை மட்டும் கட்டாயப்படுத்துவது நுகர்வோர் உரிமைகளை மீறுவதாக உள்ளது. இந்த நடைமுறை எத்தனால் கலந்த எரிபொருளுக்குப் பொருந்தாத வாகனங்களின் அதிக பராமரிப்பு செலவுகளுக்கு வழிவகுக்கிறது. ஆகையால், பெட்ரோலிய நிறுவனங்கள் எத்தனால் இல்லாத பெட்ரோல் (E0) தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்குச் சந்தையில் தொடர்ந்து கிடைக்கச் செய்வதை உறுதி செய்ய வேண்டும். அதாவது, எத்தனால் கலப்பு இல்லாத பெட்ரோலும் வாகன ஓட்டிகளுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும்” என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்
இந்த மனு, நேற்று (ஆக.1) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷதன் பராசத் தனது வாதங்களை முன் வைத்தார். அப்போது அவர், “எத்தனால் கலப்பால் 6 சதவீதம் மைலேஜ் குறைவதாக 2021இல் நிதி ஆயோக் தனது கவலையை தெரிவித்தது. குறிப்பாக, 2023க்கு முன்பு தயாரிக்கப்பட்ட வாகனங்கள் இந்த E20 பெட்ரோலுக்கு ஏற்றதல்ல. எனவே வாகன ஓட்டிகளுக்கு அதற்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும். பெட்ரோலைவிட எத்தனால் மலிவானது என்றாலும், குறைந்த விலையின் பலன் நுகர்வோருக்கு வழங்கப்படவில்லை. ஆகையால், நாங்கள் விரும்பும் ஒரு விருப்பத்தை எங்களுக்கு வழங்க வேண்டும்” என்ற வாதத்தை முன்வைத்தார்.
இதற்கு மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வெங்கடரமணி, ''அனைத்து விஷயங்களைக் கருத்தில் கொண்டுதான் அரசு பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் முடிவை எடுத்தது. இந்த முடிவு கரும்பு, மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு பெரிதும் பலன் அளிக்கும். மேலும், இந்தியா எந்த வகையான எரிபொருளைப் பயன்படுத்த வேண்டும் என்பதை நாட்டிற்கு வெளியே உள்ளவர்கள் ஆணையிடுவார்களா?'' என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்புக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
எத்தனால் கலப்பு பெட்ரோல் (EBP) திட்டம் என்பது என்ன?
எத்தனால் கலப்பு பெட்ரோல் என்பது புதுப்பித்தக்க ஓர் உயிரி எரிபொருள் ஆகும். இதை பெட்ரோலில் கலப்பதன் மூலம் காற்று மாசு குறைகிறது. அதாவது, தாவர அடிப்படையிலான மூலங்களிலிருந்து பெறப்பட்ட உயிரி எரிபொருளான எத்தனாலை, பெட்ரோலுடன் கலந்து மிகவும் நிலையான மற்றும் தூய்மையான எரிபொருளை உருவாக்கும் செயல்முறையைக் குறிக்கிறது. இந்தியாவில் கரும்பு, மக்காச்சோளம், அரிசி மற்றும் பிற உயிரி மூலங்களிலிருந்து எத்தனால் முதன்மையாக தயாரிக்கப்படுகிறது. மேலும் இது, கச்சா எண்ணெயைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் எத்தனாலை பெட்ரோலுடன் கலப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியாகும்.
பெட்ரோலுடன் 20% எத்தனால் கலத்தல் என்ற இலக்கை அரசாங்கம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அடைந்துள்ளது. ஏப்ரல் 2023 முதல், நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பெட்ரோல் பம்புகளில் E20 எரிபொருள் அறிமுகப்படுத்தப்பட்டு படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல், 2024 நிலவரப்படி, E20 பெட்ரோல் 13,569 பொதுத்துறை விற்பனை நிலையங்களில் கிடைக்கிறது. இது இந்தியா முழுவதும் எத்தனால் கலவையை விரிவுபடுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது. மேலும், 2023ஆம் ஆண்டு G20 உச்சி மாநாட்டில் தொடங்கப்பட்ட உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி (GBA) இந்தியாவை, எத்தனால் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தில் உலகளாவிய தலைவராக நிலைநிறுத்தியது. மேலும், எத்தனால் துறையின் விரைவான விரிவாக்கம் ரூ.40,000 கோடி மதிப்பிலான புதிய முதலீடுகளைக் கண்டுள்ளது. இது இந்தியாவின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி திறனை மேம்படுத்துகிறது.
எத்தனால் துறையின் விரைவான விரிவாக்கம் ரூ.40,000 கோடி மதிப்பிலான புதிய முதலீடுகளைக் கண்டுள்ளது. இது இந்தியாவின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி திறனை மேம்படுத்துகிறது.
இந்தியா, எத்தனாலை பயன்படுத்த என்ன காரணம்?
இந்தியா தற்போது ரஷ்யாவிலிருந்து பெரும்பாலான (87%) கச்சா எண்ணெய்யைக் குறைந்த விலைக்குப் பெற்று வருகிறது. அதோடு, அமெரிக்காவின் எதிர்ப்பையும் எதிர்கொள்கிறது. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு அதிரடி காட்டி வருகிறார். அந்த வகையில், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளாத நாடுகளுக்குப் புதிய வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தியாவிற்கும் 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 25% வரியுடன், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி கூடுதலாக 25% வரி விதிக்கப்பட்டுள்ளது. இது, இருதரப்பு உறவிலும் விரிசலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் இந்தியா விலை ஏற்ற இறக்கம் மற்றும் புவிசார் அரசியல் அபாயங்களுக்கு ஆளாக நேரிடுகிறது. அதேநேரத்தில், எத்தனால் கலப்பு, இறக்குமதி செய்யப்பட்ட பெட்ரோலுக்குப் பதிலாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உயிரி எரிபொருளைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தச் சார்புநிலையைக் குறைக்கிறது. இதனால் ஆற்றலில் தன்னிறைவு அதிகரிக்கிறது. எத்தனால் கலப்பு பெட்ரோல் (EBP) திட்டம் ஏற்கெனவே கடந்த பத்தாண்டுகளில் ரூ.1.1 டிரில்லியன் அந்நியச் செலாவணியைச் சேமித்துள்ளது. கூடுதலாக, 2014 மற்றும் 2024க்கு இடையில் 181 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யை மாற்ற எத்தனால் கலவை உதவியுள்ளது.
எத்தனாலின் பயன்பாடும்.. விவசாயிகளின் வளர்ச்சியும்!
நாட்டில், சுவாச நோய்கள் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவுகள் அதிகரிப்பதற்கு வாகன உமிழ்வு முக்கியப் பங்கு வகிக்கிறது. இவற்றைக் குறைக்க எத்தனால் கலப்புத் திட்டம் உதவுகிறது. எத்தனாலில் ஆக்ஸிஜன் மூலக்கூறுகள் உள்ளன. அவை முழுமையான ஆற்றலைச் செயல்படுத்துகின்றன. கார்பன் மோனாக்சைடு மற்றும் பிற துகள்களின் வெளியேற்றத்தைக் குறைக்கின்றன. 2014 முதல், எத்தனால் திட்டம் CO₂ உமிழ்வை 544 லட்சம் மெட்ரிக் டன்கள் குறைத்து, காற்றின் தரத்தைக் கணிசமாக மேம்படுத்தியுள்ளது. மேலும், கரும்பு, மக்காச்சோளம் மற்றும் பிற உயிரி எரிபொருள் பயிர்கள் மூலம் விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானத்தைப் பெற வழி ஏற்படுத்தித் தருகிறது. தவிர, வேளாண் பதப்படுத்தும் தொழில்களில் முதலீட்டை ஊக்குவிக்கிறது. வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. கிராமப்புற பொருளாதாரத்தையும் வலுப்படுத்துகிறது. வேளாண் தொழில் துறை வளர்ச்சியையும் தூண்டுகிறது. இது, இந்தியாவின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி திறனை மேம்படுத்துகிறது. குறிப்பாக, விவசாயிகளின் நிலையான வருமானத்தை உறுதி செய்வதற்காக, எத்தனால் உற்பத்திக்காக அரிசி மற்றும் மக்காச்சோளத்தை இந்திய உணவுக் கழகத்திற்கு (FCI) அரசாங்கம் அனுமதித்துள்ளது.
எத்தனால் உற்பத்திக்காக மக்காச்சோளம் பரிந்துரை!
எத்தனால் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் கரும்பு, ஒரு கிலோ சர்க்கரைக்கு 1,500–2,000 லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்துகிறது. இது உ.பி. மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் நிலத்தடி நீரை அச்சுறுத்துகிறது.
இந்தியாவில் எத்தனால் உற்பத்தி, கரும்பு சாகுபடியைப் பெரிதும் சார்ந்துள்ளது. இதற்கு மிகப்பெரிய நீர் வளங்கள் தேவைப்படுகின்றன. ஏற்கெனவே வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் நெருக்கடியை அதிகரிக்கிறது. எத்தனால் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் கரும்பு, ஒரு கிலோ சர்க்கரைக்கு 1,500–2,000 லிட்டர் தண்ணீரை எடுத்துக்கொள்கிறது. இது உ.பி. மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் நிலத்தடி நீரை அச்சுறுத்துகிறது. நிதி ஆயோக்கின் கூற்றுப்படி, கரும்பும் நெல்லும் இணைந்து நாட்டின் பாசன நீரில் 70 சதவிகிதத்தைப் பயன்படுத்துகின்றன. இது எத்தனாலின் நீண்டகால நிலைத்தன்மைக்கு அபாயங்களை ஏற்படுத்துகிறது. எனினும், இதற்கு மாற்றாக மக்காச்சோளம் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், அதிகரித்து வரும் எத்தனால் தேவை, ஏற்கெனவே மக்காச்சோளத்தில் கிடைக்கும் தன்மையைக் குறைத்துள்ளது. இது இறக்குமதி மற்றும் அதிக விலைகளுக்கு வழிவகுக்கிறது. ஆனால், கடந்த பத்தாண்டுகளில் எத்தனால் கொள்முதல் மூலம் விவசாயிகள் ரூ.1.2 லட்சம் கோடிக்கு மேல் வருவாய் பெற்றுள்ளனர்.
எத்தனால் கலப்பதால், வாகனங்களுக்குப் பாதிப்பா?
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதால், வாகனங்களின் மைலேஜ் குறையும் என சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. இத்தகைய தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தத் திட்டத்தை எதிர்த்தே உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தான் நீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்துள்ளது.
ஏப்ரல் 2023க்குப் பிறகு தயாரிக்கப்படும் BS-VI வாகனங்கள் E20-க்கு இணக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போதுள்ள வாகனங்கள் மறுசீரமைக்கப்படாவிட்டால், செயல்திறன் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.
எனினும், அதிக எத்தனால் கலப்பதற்கு வாகன தொழில்நுட்பம் மற்றும் எரிபொருள் விநியோக வலையமைப்புகளில் முன்னேற்றங்கள் தேவைப்படுகின்றன. இது இந்தியாவின் ஆட்டோ துறையில் புதுமையை செய்ய முயற்சிக்கிறது. எத்தனால்-பெட்ரோல் கலவைகளில் வாகனங்களின்செயல்திறன் மற்றும் நீடித்த உழைப்பை உறுதி செய்யும் வகையில், வாகன உற்பத்தியாளர்கள் E20-இணக்கமான இயந்திரங்களை உருவாக்கி வருகின்றனர். ஏப்ரல் 2023க்குப் பிறகு தயாரிக்கப்படும் BS-VI வாகனங்கள் E20-க்கு இணக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போதுள்ள வாகனங்கள் மறுசீரமைக்கப்படாவிட்டால், செயல்திறன்களில் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். இருப்பினும், ஏப்ரல் 2023க்கு முன்பு தயாரிக்கப்பட்ட BS-IV, BS-VI போன்ற பழைய வாகனங்களுக்கு பொதுவாக, 10% எத்தனால் சதவீதம் வரை மட்டுமே பாதுகாப்பானவை. கலவைகளுடன் எரிபொருள்கள் இருக்கும்பட்சத்தில் அவை செயல்திறன் மற்றும் நீடித்து உழைப்பதில் சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும். இந்த நடைமுறை எத்தனால் கலந்த எரிபொருளுக்குப் பொருந்தாத வாகனங்களின் அதிக பராமரிப்பு செலவுகளுக்கு வழிவகுக்கிறது.
2030ஆம் ஆண்டு இலக்கை முந்திய எத்தனால்!
2025ஆம் ஆண்டில் 20% எத்தனாலை பெட்ரோலுடன் கலக்கும் இலக்கை இந்தியா அடைந்துள்ளது. இது, 2030ஆம் ஆண்டுக்கான அசல் இலக்கைவிட மிகவும் முன்னதாகவே உள்ளது. இந்திய சர்க்கரை மற்றும் உயிரி எரிசக்தி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (ISMA) ஆதரவுடன், இந்திய அரசாங்கம் அதன் எத்தனால் கலப்பு இலக்கை முன்கூட்டியே முடிப்பதாக அறிவித்தது. இந்தத் திட்டம் 2014இல் குறைந்தபட்ச 1.5% கலவையுடன் தொடங்கியது. ஜூன் 2025க்குள் 20% ஆக அதிகரித்தது. இந்த விரைவான அளவீட்டு அதிகரிப்பு 661 கோடி லிட்டர் எத்தனால் பெட்ரோலில் கலக்க வழிவகுத்தது. இந்தியா 2023ஆம் ஆண்டில் 700 கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்துள்ளது. ஆனால் E27க்கு 2030ஆம் ஆண்டுக்குள் 1,200 கோடி லிட்டர்களுக்கு மேல் தேவைப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.