ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில் அதன் மீதான உத்தரவை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ரபேல் போர் விமானங்களை வாங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் இது தொடர்பாக உச்ச நீதிமன்ற கண்காணிப்புடன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என பல்வேறு தரப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தன. இதில் வாதாடிய மனுதாரர் பிரஷாந்த் பூஷண் ரபேல் விமான ஒப்பந்தத்தில் விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதாகவும் திருத்தப்பட்ட ஒப்பந்தத்தை பிரதமர் தன்னிச்சையாக இறுதி செய்தார் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். இதையடுத்து வாதிட்ட தலைமை வழக்கறிஞர் கேகே வேணுகோபால் போர் விமான ஒப்பந்தம் என்பது மிகவும் ரகசியமானது என தெரிவித்தார்.
தொடர்ந்து வாதிட்ட பிரஷாந்த் பூஷண், ரபேல் ஒப்பந்தத்தில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் இதை விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட வேண்டும் எனவும் வாதிட்டார். இதைக் கேட்ட நீதிபதிகள் விமானப்படை துணை தளபதி விஆர் சவுத்ரி மற்றும் மற்ற இரு அதிகாரிகளை அழைத்து ரபேல் விமானங்கள் குறித்து கேட்டறிந்தனர். அடுத்து வாதிட்ட தலைமை வழக்கறிஞர் விமானப்படையில் நவீன விமானங்கள் இல்லாதால் பல இழப்புகளை சந்தித்ததாகவும் இவற்றை தவிர்க்கவே அதிநவீன ரபேல் விமானங்கள் நமக்கு தேவைப்படுகிறது என்றும் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் அமர்வு வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்திய விமானப் படைக்கு 36 ரஃபேல் ரக போர் விமானங்களை 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்ய பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் என்ற நிறுவனத்துடன் கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இவ்விமானங்கள் மும்மடங்கு கூடுதல் விலைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக சர்ச்சை எழுந்தது.
இந்த ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் முறைகேடாக சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் காங்கிரஸ் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தது. இந்நிலையில் இது தொடர்பாக விரிவாக விசாரிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை என்றும் எல்லாம் விதிமுறைகள் படியே நடந்ததாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்தது.
இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்துள்ள நீதிபதிகள் விமான ஒப்பந்தம் குறித்து விசாரிப்பதா வேண்டாமா என்ற உத்தரவை ஒத்திவைத்துள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் ரபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எடுக்க உள்ள முடிவு தேசிய அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது