மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு.. உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறுத்திவைத்த உச்ச நீதிமன்றம்!
2006 ஜூலை 11ஆம் தேதி, மும்பையில் ஏழு உள்ளூர் ரயில் பெட்டிகளில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 189 பேர் உயிரிழந்த நிலையில், 824 பேர் காயமடைந்தனர். கடந்த 2015ஆம் ஆண்டு, இந்தச் சம்பவத்தை விசாரித்த சிறப்பு நீதிமன்றம்13 குற்றவாளிகளில் 5 பேருக்கு மரண தண்டனை விதித்தது. மேலும் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்ததுடன், ஒருவரை விதித்தது. மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவர் 2021இல் கோவிட் நோயால் இறந்தார்.
இதற்கிடையே, இந்த வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் சமீபத்தில் பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தது. அதில், குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேரையும் விடுவித்திருந்தது. கைதானவர்கள் மீதான குற்றச்சாட்டை அரசுத் தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கத் தவறி விட்டதாகக் கூறி அவர்களை விடுவித்தது.
குறிப்பாக, இந்த விசாரணையை மேற்கொண்ட பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் குண்டுவெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு வகையைக்கூட அடையாளம் காணத் தவறிவிட்டது என மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. மும்பை உயர்நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பை எதிர்த்து, மகாராஷ்டிர அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 12 பேரை விடுவித்த மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. அதேசமயம், இந்தத் தடை உத்தரவு குற்றம்சாட்டப்பட்டவர்கள் சிறையில் இருந்து விடுதலையாவதைப் பாதிக்காது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.