தெருநாய் விவகாரம் | மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் ஆணை!
தெருநாய்களைப் பிடித்துச் சென்று கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தும் முந்தைய உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான மூவர் அமர்வு தள்ளுபடி செய்தது.
இந்தியா முழுவதும் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு நாய்கள் தாக்குதலால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் நிலையில், அது உச்ச நீதிமன்றம் வரை சென்றது. இந்த நிலையில், தெருநாய்களைப் பிடித்துச் சென்று கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தும் முந்தைய உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான மூவர் அமர்வு தள்ளுபடி செய்தது.
மேலும் தனது தீர்ப்பில், தெருநாய்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் மாநில அரசுகளின் செயல்பாடு மிகவும் மந்தமாக உள்ளதாக உச்ச நீதிமன்றம் சாடியுள்ளது. விலங்குகள் கருத்தடை திட்டத்திற்கான போதிய நிதி ஒதுக்காமலும், அதனைச் சரிவர செயல்படுத்தாமலும் இருப்பதாக தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகள் மீது நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
விமான நிலையங்களில்கூட நாய்த் தொல்லை உள்ளதாக கூறிய நீதிபதிகள், ஒவ்வொரு மாவட்டத்திலும் விலங்குகள் நல மையங்களை ஏற்படுத்தி அவற்றில் தெருநாய்களை அடைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தொடர்ந்து தெருநாய்கள் கடிக்கு உள்ளாகி வருவதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது என தெரிவித்தனர். மேலும், தெருநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாய்கள் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்தைத் தடுக்கவும் மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். தெருநாய்களின் அச்சுறுத்தலின்றி பாதுகாப்பாக வாழ்வது, மக்கள் கண்ணியத்துடன் வாழும் உரிமையின் ஒரு பகுதி என்றும் உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

