ராணுவம் நிகழ்த்திய படுகொலைகள்: சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
மணிப்பூர் மற்றும் அஸ்ஸாம் மாநிலத்தில் இந்திய ராணுவம், அஸ்ஸாம் பாதுகாப்புப் படை மற்றும் மணிப்பூர் காவல்துறையினரால் நடத்தப்பட்ட சட்டத்திற்கு புறம்பான கொலைகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிகாரிகள் குழு ஒன்றை சிபிஐ இயக்குனர் நியமித்து விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் லோகுர் மற்றும் லலித் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு கூறியுள்ளது. மணிப்பூரில் கடந்த 2000-2012ஆம் ஆண்டுகளில் சுமார் 1,528 பேர் சட்டத்திற்கு புறம்பாக ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில் இந்த உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர்.
முன்னாத, கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவத்தால் சந்தேகத்தின் பேரில் சுட்டுக் கொல்லப்பட்டதற்காக வழக்கு தொடர முடியாது என்றும், சட்டத்திற்கு புறம்பான கொலை என்று கூறப்படுவது, திட்டமிட்ட படுகொலைகள் அல்ல, அது ராணுவ நடவடிக்கையே என்றும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. மேலும், இந்த விவகாரத்தில் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று மணிப்பூர் அரசு விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.