ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கக்கோரும் வழக்கு: உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கக்கோரும் வழக்கு விசாரணையில், உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ஆம் ஆண்டு பதவி ஏற்றதும் பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அதிருப்தியில் இருந்த தற்போதைய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். ஆனாலும் எடப்பாடி பழனிசாமி 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்ததால் பெரும்பான்மையை பெற்றார். நம்பிக்கை கோரும் தீர்மானம் வெற்றி பெற்றது.
இதனிடையே கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டுடன் ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக்கோரி திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி பாப்டே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் முடிவு எடுக்காமல் சபாநாயகர் ஏன் காலதாமதம் செய்தார்? இது ஏற்புடையது கிடையாது. தேர்தல் ஆணையத்தில் இருந்த வழக்கை காரணம் காட்டி காலதாமதம் செய்தது ஏற்புடையதா? 3 ஆண்டுகள் தாமதம் என்பது தேவையற்றது. தமிழக அரசு என்னதான் செய்ய போகிறது? என உச்சநீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியது.
இதையடுத்து சட்டப்பேரவை செயலாளர் பதில்தர உத்தரவிட்டு, பிப்ரவரி 14-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.