செந்தில் பாலாஜியிடம் விசாரணை: செப். 30க்குள் முடிக்க சிபிஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கின் விசாரணையை முடித்து 2 மாதத்தில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த மே 16ஆம் தேதி சென்னை மத்திய குற்றப் புலனாய்வு போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், விசாரணையை முடிக்க 6 மாதம் கூடுதல் காலஅவகாசம் வழங்கக்கோரி சென்னை மத்திய குற்றப் புலனாய்வு போலீசார் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுத் தாக்கல் செய்தனர்.

 செந்தில் பாலாஜி - அமலாக்கத் துறை
செந்தில் பாலாஜி - அமலாக்கத் துறை file image

அந்த மனுவில், ‘விசாரணை அதிகாரி 318 சாட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அதில் இதுவரை 152 பேர் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் காலகட்டத்தில் பணிக்கு அமர்த்தப்பட்ட 2,974 பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அந்த நபர்களின் பணி ஆணை தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த காலகட்டத்தில் மாநகரப் போக்குவரத்துத் துறைக்கு 901 ஓட்டுநர்கள், 902 நடத்துநர்கள், 271 உதவிநிலைப் பணியாளர்கள் வேலையில் சேர்ந்துள்ளனர். அவர்களின் விவரங்களும் தீர ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதேவேளையில் சாட்சிகளாக உள்ள பலர் தங்களது முகவரியை மாற்றிச் சென்றுள்ளதன் காரணமாக அவர்களைக் கண்டுபிடிப்பது சவாலான காரியமாக உள்ளது.

மேலும் இந்த முறைகேடு நடந்ததாகக் கூறப்பட்ட காலகட்டத்தில் பணியாளர்கள் தேர்வுசெய்த 30 மாநகரப் போக்குவரத்து அதிகாரிகள் யார் என்பது தொடர்பாகவும், அவர்களிடம் விரிவான விசாரணை நடத்தி அவர்களின் வாக்குமூலமும் பெற வேண்டியுள்ளது. முக்கியமாக, பணியமர்த்தப்பட்ட நபர்களைவிட அதிக மதிப்பெண் பெற்ற 50 பேரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது. பணி ஆணை வழங்கிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜிகோப்புப் படம்

901 ஓட்டுநர்கள், 902 நடத்துநர்கள், 271 உதவிநிலைப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டது தொடர்பான 200க்கும் மேற்பட்ட ஆவணங்கள் முழுமையாக ஆராய வேண்டியுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களின் வங்கிக் கணக்கு, பணம்கொடுத்தவர்களிடம் உள்ள ஆதாரம், எலெக்ட்ரானிக் ஆதாரம், தேர்வுக் குழுவிடம் உள்ள மதிப்பெண் விவரம், பணியமர்த்தப்பட்டவர்கள், பணி நிராகரிக்கப்பட்டவர்களிடம் உள்ள மதிப்பெண், சான்றிதழ் விவரங்களைத் தீர ஆராய வேண்டி உள்ளது. எனவே, கூடுதலாக ஆறு மாத கால அவகாசம் வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 8) உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அஸ்ஸானுதீன் அமானுல்லாஹ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. ’உரிய காரணங்களைத் தெரிவித்தால் கூடுதல் கால அவகாசம் வழங்குவது குறித்து பரிசீலிப்போம்’ என நீதிபதிகள் கூறினர். ‘இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பலரும் மாநிலம் முழுவதும் இருக்கின்றனர். அவர்கள் அனைவரிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பெறுவது என்பது கடினமான பணி. அதனால்தான் கூடுதல்கால அவகாசம் கேட்கிறோம்’ என மத்திய குற்றப் புலனாய்வு போலீசார் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜிபுதிய தலைமுறை

புகார் அளித்தவர்கள் சார்பில், ’கூடுதல் கால அவகாசம் வழங்கக்கூடாது. ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் அறிவித்தபடி சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும்’ என்று வாதங்களை முன்வைத்தனர். இதையடுத்து “ஆறு மாத கால அவகாசம் எல்லாம் வழங்க முடியாது. குறைந்தபட்ச காலஅவகாசம் மட்டுமே வழங்கப்படும்” என நீதிபதிகள் கண்டிப்பாக கூறியபோது, ’நடைமுறை பிரச்னைகள் இருக்கிறது’ என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு, “உங்களுக்குப் பிரச்னைகள் என்பது எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கும். நீங்கள் நினைத்தால் 24 மணி நேரத்தில் வேலையை முடிப்பீர்கள். 24 வருடமானாலும் வேலையை முடிக்காமல் இழுத்தடிப்பீர்கள். அரசுகள் எப்படிச் செயல்படும் என்பது தெரியும்” என நீதிபதிகள் காட்டமாக கூறினர்.

“தமிழ்நாடு டிஜிபி மற்றும் உள்துறைச் செயலாளர் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் சம்மன் அனுப்புகிறோம். எவ்வளவு கால அவகாசம் வேண்டும் என்பதை அவர்களே இந்த விஷயத்தில் நேரில் வந்து கேட்கட்டும்” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து கூறினர். தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து, ’அடுத்த அரை மணி நேரத்தில் எவ்வளவு கால அவகாசம் வேண்டும் என்பதை குறிப்பிட்டுச் சொல்கிறோம்’ எனத் தெரிவித்தனர்

“அரை மணி நேரத்தில் கேட்டு வாருங்கள்; இல்லையென்றால் தமிழ்நாடு டிஜிபி மற்றும் உள்துறைச் செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவு தொடரும்” என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர். அரை மணி நேரம் கழித்து மீண்டும் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், ‘வழக்கு விசாரணையை முடிக்க இரண்டு மாத கால அவகாசம் வழங்கினால் போதும் என மத்திய குற்றப் புலனாய்வு காவல் துறை கூறியுள்ளனர்’ என உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தனர்.

இடையே வழக்கின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய, மேலும் ஒருமாத கால அவகாசம் வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தது மத்திய குற்றப் புலனாய்வு காவல் துறை. ஆனால் அந்தக் கால அவகாசத்தை வழங்க மறுத்த நீதிபதிகள், ‘செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணையை 30 செப்டம்பருக்குள் முடிக்க வேண்டும்’ என்று மத்திய குற்றப் புலனாய்வுத் துறைக்கு உத்தரவு பிறப்பித்தனர். ‘அதற்கு மேல் எந்த கால அவகாசமும் வழங்கப்படாது. அதற்கு மேல் விசாரணை முடிக்கவில்லை என்றால் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும்’ என்றும் உத்தரவு வழங்கினர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com