“வரதட்சணை புகாரில் உடனே கைது” - உச்சநீதிமன்றம் அனுமதி

“வரதட்சணை புகாரில் உடனே கைது” - உச்சநீதிமன்றம் அனுமதி

“வரதட்சணை புகாரில் உடனே கைது” - உச்சநீதிமன்றம் அனுமதி
Published on

வரதட்சணைக் கொடுமை புகாரில் குற்றம்சாட்டப்பட்டவரை உடனடியாக கைது செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாவில் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த பெண்கள் குறித்த தகவலை மத்திய பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் மக்களவையில் தெரிவித்துள்ளது. இதில், 2016‌ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 7,621 பெண்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 58 பெண்களும், 2015ஆம் ஆண்டு 65 பெண்களும், 2014ஆம் ஆண்டு 95 பெண்களும் மரணமடைந்துள்ளனர். 

அதிகபட்சமாக உத்திரப்பிரதேச மாநிலத்தில் 2,479 பெண்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மிக அதிகபட்சமாக வரதட்சணை மரணம் நிகழும் மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. உத்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து பிஹாரில் 987 பேரும், மத்திய பிரதேசத்தில் 629 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்திய வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தின்படி பெண்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யலாம் என்று சட்டம் இருந்தது. ஆனால், இந்தச் சட்டம் சில சமயங்களில் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று தொடர்ந்து புகார்கள் குவிந்தது. 

இந்தப் புகார்கள் தொடர்பான மனுக்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டப்பிரிவு 498ஏ தவறாக பயன்படுத்தப்படுவதாகக் கூறிய உச்சநீதிமன்றம், வரதட்சணை புகார் வந்தால் குற்றம்சாட்டப்படும் நபரை உடனே கைது செய்யக் கூடாது எனத் தீர்ப்பளித்தது. வரதட்சணை புகார் தொடர்பாக விசாரிக்க மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும் என்றும், அந்தக் குழு முகாந்திரம் இருப்பதாக கருதினால் மட்டுமே குற்றம்சாட்டப்பட்ட நபரை கைது செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறி இருந்தது. 

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. அதன்படி உச்சநீதிமன்றத்தின் பழைய தீர்ப்பில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. வரதட்சணை புகாருக்கு ஆளானவர்களை உடனடியாக கைது செய்ய தடை என்ற உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர். மேலும் கைது செய்வதற்கு முன் வழக்கை விசாரிக்க குழுக்கள் அமைக்க வேண்டும் என்ற உத்தரவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில் புகாருக்கு ஆளானவருக்கு முன் ஜாமீன் வழங்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ளது. புகார் கொடுக்கும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com