உச்சநீதிமன்றம் தீர்ப்பு : பட்டாசு விற்பனைக்கு தடை ?
நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.
கடந்த ஆண்டு உலக அளவில் மாசடைந்து வரும் நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் டெல்லி நகரம் இரண்டாவது இடத்தில் இருந்தது. முதல் இடத்தில் சீனாவை சார்ந்த ஷாங்காய் நகரம் இருந்தது. முதல் இடத்தை பிடிப்பதில் இருநகரங்களுக்கும் இடையில் மாறிமாறி போட்டிகள் நடந்து வந்தன. இதனால் மாசுவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த ஆண்டு டெல்லி நகரம் முழுவதும் தீபாவளிப் பண்டிகையன்று பட்டாசுக்களை வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
டெல்லியில் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதை நாடு முழுவதும் விஸ்தரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காற்று மாசுவை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் பல்வேறு பொது நல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க கூடாது என சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்களும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பட்டாசுக்குத் தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. மேலும் இந்த வழக்கில் எதிர்தரப்பாக பட்டாசு விற்பனையாளர் சங்கங்கள் சேர்க்கப்பட்டது.இதனிடையே சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்கக்கோரி நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டமும் நடைப்பெற்றது. இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த உச்ச நீதிமன்றம், பட்டாசுக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறது.