இந்தியாவில் ஓரினச்சேர்க்கை திருமணம்: மத்திய அரசின் மறுப்பும் உச்சநீதிமன்றத்தின் முடிவும்!

இந்தியாவில் ஓரினச்சேர்க்கை திருமணம்: மத்திய அரசின் மறுப்பும் உச்சநீதிமன்றத்தின் முடிவும்!

இந்தியாவில் ஓரினச்சேர்க்கை திருமணம்: மத்திய அரசின் மறுப்பும் உச்சநீதிமன்றத்தின் முடிவும்!

இந்தியாவில் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பான இறுதி விசாரணையை ஏப்ரல் மாதம், ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் உள்ளதுபோல் ஓரினச்சேர்க்கை உறவுமுறை (ஆணோடு ஆணும் பெண்ணோடு பெண்ணும்) நம் நாட்டிலும் அதிகரித்து வருகிறது. மாற்று பாலினத்தவர்களுக்கு சட்டரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்ட பின்னர், ஓரினச்சேர்க்கை உறவுகளுக்காகவும் சட்டப் பாதுகாப்பை தேடி தற்போது குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. ஆம், 'இந்தியாவிலும் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்' என அவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு குறித்து உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்த மத்திய அரசு, “ஓரினச் சேர்க்கையாளர்கள் சேர்ந்து வாழ்வது இந்தியக் குடும்பக் கொள்கையுடன் ஒப்பிடத்தக்கது அல்ல. கணவன் ஆணாகவும், மனைவி பெண்ணாகவும் இருந்து இவர்கள் இருவருக்கும் பிறக்கும் குழந்தை ஆகியோரை கொண்டதே குடும்ப அமைப்பாகக் கருத முடியும்” என பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது. மேலும், “இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவு குற்றமற்றதாக மாற்றப்பட்டபோதிலும், ஒரே பாலின திருமணத்தை நாட்டின் சட்டங்களின்கீழ் அங்கீகரிப்பதற்கு மனுதாரர்கள் அடிப்படை உரிமை கோர முடியாது. ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கலாமா என்பதை நாடாளுமன்றமே முடிவு செய்ய வேண்டும்” என மத்திய அரசு கூறியிருந்தது.

இந்த மனு மீதான மறு விசாரணை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒக் சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் பி.எஸ் நரசிம்மா, ஜே.பி பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், “இந்தியாவில் தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடர்பான இறுதி வாதங்களை வரும் ஏப்ரல் 18-ம் தேதி, ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும். இந்த விஷயத்தில் எடுக்கும் எந்த முடிவும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த விசாரணை உச்சநீதிமன்ற இணையதளம் மற்றும் யூடியூபில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

அரசியலமைப்பின் A 145(3)-ஐ கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் மூலம் இந்த பிரச்னை தீர்க்கப்பட்டால் அது பொருத்தமானதாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். எனவே, அதை அரசியல் சாசன பெஞ்ச் முன் வைக்க உத்தரவிடுகிறோம்” என்று கூறி இந்த வழக்கை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைத்தது. மேலும், இந்த மனுக்கள் மீதான விசாரணை ஏப்ரல் 18ஆம் தேதி தொடங்கும் என தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த வழக்கு விசாரணையின்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “ஓரினச் சேர்க்கையாளர் திருமணங்களை அங்கீகரிப்பது சட்டச் சிக்கல்களைத் தூண்டும். திருமணம் என்பது இந்துக்களுக்கான ஒப்பந்தம் மட்டுமல்ல, இஸ்லாமிய சட்டத்திலும் உள்ளது. நாடாளுமன்றம், மக்களின் விருப்பத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும், குழந்தையின் உளவியலை ஆராய வேண்டும்” என வாதத்தை வைத்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான அபிஷேக் மனு சிங்வி, "பாலியல் சார்பு அடிப்படையில் யாரும் திருமணம் செய்துகொள்ளும் உரிமையை தடுக்க முடியாது. அவர்களுக்கும் திருமணம் செய்யும் உரிமை அளிக்கப்பட்டால், அது சமமாக அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கும் சிறப்பு திருமணச் சட்டம் அளிக்கப்பட வேண்டும்” என வாதத்தை வைத்துள்ளார்.

இப்படியான வாதங்களை தொடர்ந்து இந்த மனுக்கள் மீதான விசாரணை ஏப்ரல் 18ஆம் தேதி தொடங்கும் எனக்கூறி ஒத்திவைக்கப்பட்டது.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com