சிபிஐ இயக்குநரின் கட்டாய விடுப்புக்கு எதிரான மனு : உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதற்கு எதிராக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
பல்வேறு முக்கிய பொறுப்புகளை பதவி வகித்து வரும் அலோக் வர்மா, உச்சகட்டமாக கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரியில் சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்றார். 2016 டிசம்பரில் இடைக்கால சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்த குஜராத் ஐபிஎஸ் அதிகாரி ராகேஷ் அஸ்தானா அப்போது, இரண்டாம் இடத்தில் சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டார். வரும் ஜனவரியில் அலோக் வர்மா ஓய்வுப் பெறவுள்ள நிலையில், அவருக்கு அடுத்து ராகேஷ் அஸ்தானா சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.
ராகேஷ் அஸ்தானா மீது தொடக்கத்தில் சில ஊழல் புகார்கள் எழுந்ததை சுட்டிக்காட்டி, அவருக்கு சிபிஐ சிறப்பு இயக்குநர் பதவி வழங்க தொடக்கத்திலேயே அலோக் எதிர்ப்பு தெரிவித்தார். சிபிஐயின் இயக்குநராக இருக்கும் அலோக் வர்மா, லாலு பிரசாத் யாதவ் தொடர்புடைய ஐஆர்சிடிசி வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளின் விசாரணையை தடுக்க முயற்சிப்பதாக சிபிஐயின் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மத்திய ஊழல் தடுப்பு ஆணையருக்கு கடிதம் எழுதி இருந்தார். இவ்வாறு இருவரும் பரஸ்பரம் புகார்களை தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து, பனிப்போரில் ஈடுபட்ட சிபிஐ அதிகாரிகள் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானாவை பிரதமர் மோடி நேரில் அழைத்து தனித்தனியாக சந்தித்தார். அப்போது, பிரதமர் மோடியிடம் இருவரும் மாறிமாறி குற்றச்சாட்டுக்களை முன் வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர். அலோக் வர்மா கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிபிஐயின் தற்காலிக இயக்குநராக நாகேஸ்வர் ராவை மத்திய அரசு நியமித்தது. இதைத்தொடர்ந்து கட்டாய விடுப்பை எதிர்த்து அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்ககோரி உச்சநீதிமன்றத்தில் அலோக் வர்மா சார்பில் வழக்கறிஞர் கோபால் சங்கர் நாராயணண் கோரிக்கை வைத்தார். குற்றச்சாட்டு ஆரம்ப நிலையில் இருக்கும் போது விடுப்பு கொடுக்கப்பட்டது சட்டப்படி தவறு என வாதிடப்பட்டது. மேலும் அதிமுக்கியமான வழக்குகளை அலோக் வர்மா விசாரித்து வரும் நிலையில், அவரை பணி செய்யவிடாமல் தடுத்தால் வழக்குகளின் நிலை கேள்விக்குறியாகும் எனக் கூறப்பட்டது. வாதங்களை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்று விசாரணை நடத்துகிறார்.