பில்கிஸ்பானோ வழக்கு குற்றவாளிகள் விடுதலை: மத்திய அமைச்சரின் ஆதரவும், மஹுவாவின் எதிர்ப்பும்

பில்கிஸ்பானோ வழக்கு குற்றவாளிகள் விடுதலை: மத்திய அமைச்சரின் ஆதரவும், மஹுவாவின் எதிர்ப்பும்
பில்கிஸ்பானோ வழக்கு குற்றவாளிகள் விடுதலை: மத்திய அமைச்சரின் ஆதரவும், மஹுவாவின் எதிர்ப்பும்

பில்கிஸ்பானோ கூட்டு பாலியல் வழக்கு குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை நவம்பர் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

வழக்கில் நடந்தது என்ன?

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு கோத்ரா வன்முறை சம்பவத்தின் போது ஏராளமான மனித உரிமை மீறல்கள் மற்றும் கொடுங் குற்றங்கள் அரங்கேறியது. இதில் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதுடன் அவருடைய கண்ணின் முன்பாகவே அவருடைய மூன்று வயது மகள் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் கடந்த 2008 ஆம் ஆண்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது இதனை மும்பை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது

குற்றவாளிகள் 11 பேருக்கு சமீபத்தில் குஜராத் அரசு சிறையில் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை அளித்தது. சிறையில் இருந்து வெளியில் வந்த அவர்களுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. 

விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுக்கள்:

இந்த விடுதலையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் சுபாஷினி அலி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மௌவா மொய்த்ரா மற்றும் ஏராளமான பொதுநல மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்து, குஜராத் மாநில சட்ட விதிகளின்படி குற்றவாளிகள் விடுதலை பெற தகுதியுடையவர்களா இல்லையா என்பதுதான் கேள்வி எனவே குஜராத் அரசு மற்றும் மத்திய அரசு 2 வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டிருந்தனர்.

இதில் பதிலளித்த குஜராத் அரசு நன்னடத்தை காரணமாக இந்த 11 பேரின் விடுதலைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது என்றும் தண்டனை காலமான 14 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று நீதிபதி அஜய் ரஸ்தோகி அமர்வில் விசாரணைக்கு வந்த போது குஜராத் அரசு தாக்கல் செய்துள்ள பதில் மிகப்பெரிதாக உள்ளது விரிவாக பார்க்க வேண்டியிருப்பதால் வழக்கை நவம்பர் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

குற்றவாளிகளின் விடுதலைக்கு மத்திய அமைச்சர் ஆதரவு:

மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, ‘ குற்றவாளிகள் 11 பேரும் அவர்களது தண்டனை காலத்தை அனுபவித்துவிட்டனர். அதன்பிறகு சிறையில் அவர்கள் நன்நடத்தையில் இருக்கிறார்கள் என்பதன் அடைப்படையில் தான் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். நன்நடத்தையின் அடிப்படையில் குற்றவாளிகளை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. சட்டத்துக்கும், அதிகாரத்துக்கு உட்பட்டு தான் அரசு செயல்படுகிறது. ஆனால் இந்த விடுதலையை தவறாக சித்தரிக்கப்பட்டு வருகிறது’ என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், மத்திய அரசின் இணை செயலாளர் ஸ்ரீ பிரகாஷ், குஜராத் மாநிலத்தின் உள்துறை செயலாளர் ஸ்ரீ மயுர்சின் வகேலாவுக்கு எழுதிய கடிதத்தை திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதில், "பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் 11 பேரை விடுவிக்க சிபிஐ முடியாது என்று சொன்னது. சிபிஐ சிறப்பு நீதிமன்றமும் முடியாது என்று சொன்னது. ஆனால் ‘முன்கூட்டியே விடுதலை செய்ய’ மத்திய அரசு சரி என்று கூறியுள்ளது” என மத்திய அரசு அனுப்பிய கடிதத்தின் புகைப்படத்தை பகிர்ந்து தனது அதிர்ச்சியை பதிவு செய்துள்ளார். தற்போது எம்பி மஹுவா மொய்த்ரா வெளியிட்டுள்ள இந்த கடிதம் சர்ச்சையாகி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com