கொல்கத்தாவைச் சேர்ந்த இளம்தாய் ஒருவர் தனது 23 வார கர்ப்பத்தை கலைக்க அனுமதி கேட்டு தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில், நீதிபதிகள் அவருக்கு சாதகமாக தீர்ப்பளித்துள்ளனர்.
கொல்கத்தாவைச் சேர்ந்த ஷர்மிஸ்தா என்ற கர்ப்பிணிப் பெண் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தனது கருவில் உள்ள குழந்தை பல்வேறு குறைபாடுகளால் வயிற்றிலே இறந்துவிடும் என்று குறிப்பிட்டுள்ளார். மீறி அந்த குழந்தையை பெற்றுக்கொள்ள நினைத்தால் கூட அந்த குழந்தை இறந்தே பிறக்கும் என்று மருத்துவர்கள் கூறுவதாகவும், அதனால் தனது உயிரையும், வருங்காலத்தையும் கருத்தில் கொண்டு தன்னுடைய 23 வார கருவை கலைக்க அனுமதிக்கும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஒய்.யூ.சந்திரசந்த் மற்றும் எஸ்.கே.கவுல் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தாயின் உடல்நிலையை கருத்தில் கொண்டும், குழந்தை குறித்த அவரின் மனோபயத்தின் விளைவை கருத்தில் கொண்டும் கருகலைப்பிற்கு அனுமதி வழங்குவதாக தெரிவித்தனர். அதற்கு முன்பு 7 மருத்துவர்கள் கொண்ட குழு, ஷர்மிஸ்தாவை முற்றிலும் சோதனை செய்து அவரின் உடல்நிலை குறித்த அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. 23 வார கருவை கலைப்பது என்பது சாதாரண விஷயமில்லை என்றும் இது ஆபத்து நிறைந்தது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தைகளுக்கான சில குறைபாடுகள் 20 வாரங்களுக்குள் தெரியும் என்றும், உள் உறுப்பு தொடர்பான குறைபாடுகள் 20 வாரங்களுக்கு பின்தான் தெரியும் என மருத்துவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.