புதிய நாடாளுமன்ற கட்டட பணிகளுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி!
டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டட பணிகளுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
971கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நாடாளுமன்றம் மற்றும் அதனையொட்டிய பிற கட்டுமானங்களை கட்டுவதற்கான சென்ட்ரல் விஸ்டா புராஜெக்ட்-இல் பல விதிமீறல்கள் இருப்பதாகவும், அதனை நிறுத்த வேண்டும் என்றும் பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது கடந்த 7ஆம் தேதி விசாரணை நடைபெற்றபோது, விசாரணை முடியும் வரை புதிதாக கட்டுமானங்களை எழுப்பவோ, பழைய கட்டுமானங்களை இடிக்கவோ கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மரங்களை வெட்டக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. இவை பின்பற்றப்படும் என்று மத்திய அரசு தரப்பிலும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி இந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திட்டத்திற்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில், இதுகுறித்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதில், கன்வில்கர் மற்றும் மகேஸ்வரி ஆகிய இரண்டு நீதிபதிகள் புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அனுமதி வழங்கியுள்ளனர். மற்றொரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார். இதனால் நாடாளுமன்ற கட்டடம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.