‘எங்கேயோ சிஸ்டம் செயலிழந்துவிட்டது’ - உச்சநீதிமன்றம் வேதனை
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள குற்றவழக்குகளை குறிப்பிட்டு சிஸ்டம் செயலிழந்துவிட்டதாக உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விவரங்கள் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. இதில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆண்டுக்கணக்கில் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. குறிப்பாக கிரிமினல் வழக்குகளும், ஜாமீன் கோரிய வழக்குகளும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வந்துள்ளன.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 20 ஆண்டுகளுக்கும் மேலாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஏன் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறித்து பதில் அளிக்குமாறு உத்தரவிட்டது. எங்கேயோ, சிஸ்டம் செயல் இழந்துவிட்டது என்பதை தான் இது காட்டுவதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு உதவும்படி சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் டெல்லி உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சோதி ஆகியோரை கேட்டுக்கொண்டுள்ளனர்.