
தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கிய வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நவம்பர் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ் நிறுவனத்தின் அந்நிய நேரடி முதலீட்டிற்கு முறைகேடாக அனுமதி பெற்றுத்தந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை விசாரித்து வருகின்றன. இதுதொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டும் கார்த்தி சிதம்பரம் ஆஜராகவில்லை என்பதால், அவர் வெளிநாடுகளுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தார். ஆனால் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கூடாது என்று சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. அவ்வாறு அனுமதித்தால் அங்குள்ள வங்கிகளில் அவருக்கு எதிராக உள்ள ஆதாரங்களை அழிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டது. நிலுவையில் உள்ள இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், நவம்பர் 9ஆம் தேதி வரை கார்த்திச் சிதம்பரம் வெளிநாடு செல்வதற்கான தடை தொடரும் என்றும், இதுதொடர்பாக சிபிஐ விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.