சட்டமன்றத்தில் பொதுசொத்துக்களை சேதப்படுத்துவது கருத்து சுதந்திரம் அல்ல: உச்சநீதிமன்றம்
சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ பொதுச்சொத்துக்களை எம்.பி, எம்.எல்.ஏக்கள் சேதப்படுத்துவது கருத்து சுதந்திரம் அல்ல என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
2015-ஆம் ஆண்டு கேரளா சட்டமன்றத்தில் மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அங்கிருந்த மைக்குகள், நாற்காலிகள் ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தியிருந்தார்கள்.
இதற்கு எதிராக கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யபட்டிருந்தன. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி திருவனந்தபுரம் மாஜிஸ்திரேட்டிடம் மனு அளித்தனர். ஆனால் அந்த கோரிக்கையை ஏற்க மாஜிஸ்திரேட் மறுத்துவிட்டார். பின்னர், கேரளா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். உயர்நீதிமன்றமும் மறுப்பு தெரிவித்துவிட்டது.
தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள். உச்சநீதிமன்ற நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. அவர்களும் இந்த மனுவை தள்ளுபடி செய்திருக்கிறார்கள். மேலும், சில கருத்துகளையும் கூறியிருக்கிறார்கள்.
அதில், “சட்டமன்ற உறுப்பினர்களோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களோ அவர்களுக்கு பதவி வழங்கியிருப்பது எந்தவித தடையும் இல்லாமல், பயமும் இல்லாமல் அவையில் பொதுப்பணியை செய்யத்தானே தவிர, இதுமாதிரியான கிரிமினல் குற்றங்களில் இருந்து தப்புவதற்கு அல்ல.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டமையால் இந்தமாதிரியான வழக்கை தொடர்ந்திருக்கிறீர்கள். ஆனால் சட்டமன்ற உறுப்பினர்களோ நாடாளுமன்ற உறுப்பினர்களோ சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது. சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ பொதுச்சொத்துக்களை எம்.பி, எம்.எல்.ஏக்கள் சேதப்படுத்துவது கருத்து சுதந்திரம் அல்ல” என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.