நீதிபதி கர்ணனின் மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு
ஆறு மாத தண்டனையை ரத்து செய்யக் கோரி கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன், தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தார். இதனால், ஆத்திரமடைந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா காவல்துறையினர் சென்னையில் முகாமிட்டிருந்த போதிலும், அவர் தலைமறைவாக உள்ளதால் கைது செய்ய முடியவில்லை. இந்நிலையில், தன் மீதான சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி நீதிபதி கர்ணன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மேல் முறையீட்டுக்கு வாய்ப்பு இல்லை என்று நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார். எனவே, நீதிபதி கர்ணன் இனி குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிடலாம் எனத் தெரிகிறது.