நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்பு கோரிய அதிகாரிகள்; வழக்கை முடித்துவைத்த உச்சநீதிமன்றம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்பு கோரிய அதிகாரிகள்; வழக்கை முடித்துவைத்த உச்சநீதிமன்றம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்பு கோரிய அதிகாரிகள்; வழக்கை முடித்துவைத்த உச்சநீதிமன்றம்

தமிழகத்தில் மதிப்பெண் அடிப்படை, சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத முன்னாள் தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளனர். இதனையடுத்து அவர்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைத்துள்ளது உச்சநீதிமன்றம்.

இந்த வழக்கு இதற்கு முன் விசாரணைக்கு வந்தபோது அப்போதைய தலைமை செயலாளர் கே.சண்முகம், அப்போதைய பொதுப்பணித்துறை செயலாளரும், இந்நாள் கூடுதல் தலைமை செயலாளருமான எஸ்.கே.பிரபாகர், முன்னாள் டி.என்.பி.எஸ்.சி செயலாளர் நந்தகுமார், முன்னாள் பொதுப்பணித்துறை செயலாளர் கே.மணிவாசன், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலாளர் எஸ்.சொர்ணா, முன்னாள் டி.என்.பி.எஸ்சி செயலாளர் எம். விஜயகுமார், டி.என்.பி்எஸ்.சி முன்னாள் நிர்வாக தலைவர் எஸ்.தினகரன், பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் செயலாளர் தலைமை எஸ்.பக்தவச்சலம், பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் கே.ராமூர்த்தி ஆகிய 9 அதிகாரிகள் மீதான நீதிமன்ற அவமதிப்பை உறுதிபடுத்திய உச்சநீதிமன்றம், அவர்களுக்கான தண்டனை (Quantum of punishment) தொடர்பாக விசாரணை செய்து இன்று உத்தரவு பிறப்பித்தது.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்புக்காக ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூசன், “இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னரும் ‘கே.சண்முகம், சொர்ணா , மணிவாசன், நந்தகுமார், ராமமூர்த்தி’ ஆகிய அதிகாரிகள் உத்தரவை அமல்படுத்தாமல் பொய்யான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தனர். எனவே இவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், குறைந்தது 1 மாதமாவது இவர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும், அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் தான் இதுபோன்ற தவறுகள் வருங்காலத்தில் நடக்காது” என தெரிவித்தார்

இதனைதொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு செய்ய அதிகாரிகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, “இந்த வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு அமல்படுத்தப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதேநேரம் இந்த அதிகாரிகள் தாங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரியுள்ளனர். மேலும் தற்போது உச்சநீதிமன்ற உத்தரவு அமலும் படுத்தப்பட்டுள்ளது. எனவே இப்போது இவர்களுக்கு தண்டனையோ, நீதிமன்றத்தின் கடுமையான கருத்துகளோ, வார்த்தைகளோ அவர்களின் பணியில் பாதிப்பு ஏற்படுத்தும். எனவே தற்போது உத்தரவு அமல்படுத்தப்பட்டுவிட்டதால், நீதிமன்றம் இந்த பிரச்சனையை மன்னித்து விட வேண்டும்” என கோரினார்

இதனையடுத்து வாதிட்ட அவமதிப்பு செய்த அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், “அதிகாரிகளின் மன்னிப்பு கடிதத்தை ஏற்று, நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும். ஏனெனில் இந்த அதிகாரிகளின் பணிகளில இதுவரை எந்தவொரு கரும்புள்ளிகளும் இல்லை, எனவே இந்த அவமதிப்பு வழக்கை முடித்து வைக்க வேண்டும், தண்டனை வழங்க வேண்டாம்” என கோரினார்.

அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்புக்காக வழக்கறிஞர், “இந்த அதிகாரிகள் உச்சநீதிமன்றம் உத்தரவை அமல்படுத்தியதாக போலி ஆவணங்களை வழங்கியுள்ளனர். இது மிகப்பெரிய குற்றம். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே மோசமாக நடத்தியுள்ளனர். எனவே கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

இதனைதொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்ட அதிகாரிகள் ஒவ்வொருவராக காணொளி மூலம் ஆஜராகினார். முதலில் ஆஜரான அதிகாரி சொர்ணாவிடம், “உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகும் அதை ஏன் பின்பற்றாமல் இருந்தீர்கள்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அதிகாரி அவர், “எந்த உள்நோக்கத்துடனும் தவறை செய்யவில்லை. உத்தரவை அமல்படுத்த தவறியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்” என தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், “மூத்த அதிகாரிகளாக இருக்கும் நீங்கள், நீதிமன்றத்தின் உத்தரவுகளை செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும், அரசுக்கு எடுத்துரைக்க வேண்டும். வருங்காலத்தில் இதுபோன்ற தவறை செய்யக்கூடாது” என அறிவுறுத்தினர்

இதனைதொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி அதிகாரி நந்தகுமார் காணொளி மூலம் ஆஜராகி மன்னிப்பு கோரினார் மேலும் அவர் உத்தரவை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், சில விஷயங்களில் அரசின் கருத்தை காட்டும் எனவும் தெரிவித்தார். ஆனால் நீதிபதிகள் அதிகாரி நந்தகுமாரிடம், “டி.என்.பி.எஸ்.சி என்பது தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு சுயமாக இயங்கும் அமைப்பு.அப்படி இருக்கையில் அரசு கூறும் அனைத்தையும் கேட்பீர்களா, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மாட்டீர்களா? உங்கள் பதிலில் திருப்தி அடையவில்லை” என தெரிவித்தனர்.

இதையடுத்து முன்னாள் தலைமை செயலாளர் கே.சண்முகம் ஆஜராகி, “கொரொனா காரணமாக தான் உத்தரவை அமல்படுத்தவில்லை. அதற்காக மன்னிப்பு கோருகிறேன்” எனக் கூறினார். அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், “இதுபோன்ற சாக்கு போக்குகளை சொல்லாதீர்கள்” என கூறினர்.

இதனையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், “நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தவறியதற்காக மன்னிப்பு கோரியதால் அதிகாரிகளுக்கு எதிரான அவமதிப்பு நடவடிக்கையை கைவிடுகிறோம். அதேவேளையில் அதிகாரிகளின் செயல்பாடுகள் ஏற்கதக்கவகையில் இல்லை. வருங்காலத்தில் இதுபோன்ற அவமதிப்பில் ஈடுபடக்கூடாது” என எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் எனக்கூறி எச்சரிக்கை விடுத்து அவமதிப்பு வழக்குகளை முடித்து வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com