பிரியா வாரியர் கண் சிமிட்டல் வழக்கு - உச்சநீதிமன்றம் தள்ளுபடி
பிரியா வாரியர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஓமர் லூலூ என்பவரின் இயக்கத்தில் பிரியா வாரியர் நடித்த மலையாள திரைப்படம் ‘ஒரு அடார் லவ்’. இந்தப்படத்தின் ‘மாணிக்ய மலரே பூவி’ என்ற பாடலில் பிரியாவின் புருவ அசைவுகள் மற்றும் கண் சிமிட்டல்கள் காட்சிகள் வைரலானது. இந்தப் பாடல் நபிகள் நாயகத்தை தொடர்புபடுத்தி இஸ்லாமிய மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக, ஐதராபாத் காவல் நிலையத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதே குற்றச்சாட்டின் அடிப்படையில் மகாராஷ்டிராவில் உள்ள ஜின்சி காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
இந்த இரண்டு வழக்குகளையும் தள்ளுபடி செய்யக்கோரி நடிகை பிரியா வாரியர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தான் நடித்துள்ள பாடல் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக உள்ளதாக அவர் கூறியிருந்தார். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்தது. அத்துடன் மகாராஷ்டிரா, ஹைதராபாத் காவல்நிலையங்களில் தரப்பட்ட புகார்கள் மீதும் நடவடிக்கை கூடாது எனவும் உத்தரவிட்டது.
பின்னர் ப்ரியா வாரியரின் மனுவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கு முன் ப்ரியா வாரியர் மீது வழக்கு தொடர்ந்தவர்கள் தரப்பிலிருந்தே, இந்த மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில், ப்ரியா வாரியர் நடித்துள்ள பாடலில், முற்றிலும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட கருத்துகள் படமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இஸ்லாமியர்களின் மத உணர்வையும், மனதையும் புண்படுத்தும் வகையில் அந்த பாடல் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. எனவே ப்ரியா வாரியரின் மனு மீது குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில், பிரியா வாரியர் நடிப்பு யார் மனதையும் புண்படுத்தும் படி இல்லையென்று நீதிமன்றம் தெரிவித்தது. அத்துடன் யாரையும் அவமதிக்கும் வகையிலும் இல்லை என்று கூறியது. அத்துடன் பிரியா மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் அவர்மீது கூறப்பட்டுள்ள குற்றவியல் புகார்களையும் தள்ளுபடி செய்தது.