வழக்கு விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்பலாம்: உச்சநீதிமன்றம்
நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகளின் விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பொதுவாக நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகளின் விசாரணைகளில் என்னென்ன பேசிக்கொள்கிறார்கள், என்ன உத்தரவு போடப்படுகிறது என்பதை எல்லாம் நேரலையாக நாம் காண இயலாது. முக்கிய அரசியல் தலைவர்களின் வழக்குகள் என்றால் கூட வழக்கறிஞர்கள் தவிர குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி இருக்கும். நீதிபதியின் கருத்துகள், வழக்கு விசாரணையில் பேசப்பட்டவைகள் அனைத்தும் அந்த நேரத்தில் நீதிமன்றத்தில் இருப்பவர்கள் மூலமே வெளி ஆட்களுக்கு தெரியவரும்.
இந்நிலையில் நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகளின் விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறைகள் உச்சநீதிமன்றத்தில் இருந்தே தொடங்கும் என குறிப்பிட்டுள்ள உச்சநீதிமன்றம், முக்கிய வழக்குகளில் விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வதன் மூலம் நீதித்துறை மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.