“அனைத்து தரப்பினருக்கும் நன்றி” - தேர்தல் ஆணையர்
மக்களவைத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிக்க ஒத்துழைத்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று 7-வது இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதிகட்டமாக மொத்தமாக 8 மாநிலங்களிலுள்ள 59 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இது தவிர தமிழகத்தில் திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
அதுமட்டுமின்றி தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவும் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். ஒரு சில வாக்குச்சாவடிகளில் சின்னச் சின்ன பிரச்னைகள் இருந்தாலும் பெருவாரியான வாக்குச்சாவடிகளில் அசம்பாவிதங்கள் இல்லாமல் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்தது. மாலை 6 மணியோடு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், 59 தொகுதிகளிலும் 60.21 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிக்க ஒத்துழைத்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்களர்கள், வேட்பாளர்கள், காவல்துறை, துணை ராணுவத்திற்கு நன்றி ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.