இயற்பியலில் அன்று பூஜ்ஜியம்.. இன்று டாக்டர் பட்டம்.. சாதனை மாணவியை பாராட்டிய சுந்தர் பிச்சை..!
நம்மில் பலர் கணிதம், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் குறைவான மதிப்பெண்கள் வாங்கி விட்டால் அது நமக்கு கண்டிப்பாக வராது என்று முடிவு எடுத்து விடுகிறோம். ஆனால் அவ்வாறு முடிவு எடுக்காமல் ஒரு பெண் செய்த விடா முயற்சி தற்போது பலருக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. அவர் யார் ? அவரது செயல் யாரை கவர்ந்து உள்ளது ? என்பது குறித்து தெரிந்து கொள்வோமோ..?
அமெரிக்காவின் பெர்க்லி பகுதியிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் ‘ஆஸ்ட்ரோ பிஸிக்ஸ்’ எனப்படும் விண்வெளி சார்ந்த இயற்பியல் துறையில் சரஃபீனா நான்ஸ் என்பவர் பிஎச்டி பட்டப்படிப்பு பயின்று வருகிறார். இவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையும் பெற்று உள்ளார். ஆனால் இவரின் வாழ்க்கையில் முக்கியமான விஷயம் இதுவல்ல.
இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தேர்வு ஒன்றில், குவாண்டம் இயற்பியலில் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் எடுத்ததுதான். பூஜ்ஜியம் மதிப்பெண்கள் எடுத்ததால் பயந்த சரஃபீனா, தனக்கு வராத படிப்பை எப்படி படிக்க முடியும் என நினைத்ததோடு அதனை மாற்றவும் முடிவெடுத்திருக்கிறார். ஆனால் இன்று அவர் இயற்பியல் துறையில் பிஎச்டி பட்டப்படிப்பை படிப்பதோடு, இரண்டு ஆராய்ச்சி கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். இந்த 4 வருட இடைப்பட்ட காலத்தில் அப்படி என்னதான் நடந்திருக்கும் என உங்களுக்கு எல்லாம் ஒரு கேள்வி எழும்பும் அல்லவா..? இதற்கான விடையை அவரே கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “நான்கு வருடங்களுக்கு முன்பு நான் குவாண்டம் இயற்பியலில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தேன். அப்போது என்னுடைய ஆசிரியரை சந்தித்து எனக்கு இயற்பியல் வரவில்லை எனக் கூறி அந்தப் படிப்பை மாற்றவேண்டும் என்று முடிவெடுத்தேன். ஆனால் இயற்பியில் துறையில் முனைவர் பட்டப்படிப்பு படிக்கிறேன். கணிதம், தொழில்நுட்பம், அறிவியல், பொறியியல் படிப்புகளில் குறைவான மதிப்பெண்கள் என்பது, நம்மால் அதனை செய்ய முடியாது என்று அர்த்தமல்ல..எல்லாவற்றிற்கும் மேல் கடின உழைப்பு முக்கியம்”எனக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே வராது என்று 4 வருடங்களுக்கு முன்பு அவர் நினைத்த பாடத்தில் இன்று சாதனையே புரிந்துவிட்டார். அதற்கு பின்னால் இருப்பது ஒன்றே ஒன்றுதான் அது விடா முயற்சி..
இப்படித்தான்... வாழ்க்கையில் எப்போதும் நம்மால் இது முடியாது...? மதிப்பெண்கள் குறைந்துவிட்டதோ நமக்கு இந்தப் பாடம் வராதோ என்ற எதிர்மறையான எண்ணங்களுக்கு ஒருபோதும் நாம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்தவொரு காரியத்தையும் முழுமூச்சாக, விடா முயற்சியுடன் செய்யும் போது வெற்றி என்பது நம்மை அறியாமலேயே நம் கண் முன்னே வந்துவிழும். அதற்கு உதாராணமாகத்தான் சரஃபீனாவின் விடா முயற்சியும் இருக்கிறது. விடா முயற்றியால் எதுவும் முடியும் என்ற சரஃபீனாவின் வார்த்தைதான் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயலார் அதிகாரி சுந்தர் பிச்சையையும் கவர்ந்துள்ளது. இதுகுறித்து சுந்தர் பிச்சையும் பாராட்டி ட்வீட் செய்துள்ளார். நாமும் விடா முயற்சியால் எதையும் செய்தால் வெற்றி நிச்சயமே.