“நவ்ஜோத் சித்து பணத்துக்காக தனது தாய், சகோதரியை விரட்டி விட்டவர்”- சகோதரி கண்ணீர் பேட்டி

“நவ்ஜோத் சித்து பணத்துக்காக தனது தாய், சகோதரியை விரட்டி விட்டவர்”- சகோதரி கண்ணீர் பேட்டி

“நவ்ஜோத் சித்து பணத்துக்காக தனது தாய், சகோதரியை விரட்டி விட்டவர்”- சகோதரி கண்ணீர் பேட்டி
Published on

பஞ்சாப் காங்கிரஸின் மூத்த தலைவரான நவ்ஜோத் சிங் சித்து, பெற்ற தாயை கைவிட்டு, அனாதையாக ரயில்வே நிலையத்தில இறக்க காரணமாக இருந்தவர் என்று, அவரது சகோதரி குற்றஞ்சாட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப்பில் வரும் பிப்ரவரி மாதம் 20-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 22 நாட்களே உள்ள நிலையில், அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து ஆளும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள கடும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதேபோல், பஞ்சாபில் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் பா.ஜ.க. கட்சியும் செயலில் இறங்கியுள்ளது. இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து மீது, அமெரிக்காவில் வசித்து வரும் சகோதரியான சுமன் தூர் பரபரப்பு குற்றச்சாட்டை செய்தியாளர்கள் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

தற்போது பஞ்சாப் மாநிலம் சண்டிகர் வந்துள்ள அவர் இதுகுறித்து கூறுகையில், “நவ்ஜோத் சிங் சித்து மிகவும் கொடூரமானவர். பணத்துக்காக என்னுடைய அம்மாவை கொன்றுவிட்டார். கடந்த 1986-ம் ஆண்டு தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, வயதான தாயை, நவ்ஜோத் சிங் சித்து கைவிட்டார். அதன்பிறகு 1989-ம் ஆண்டு டெல்லி ரயில் நிலையத்தில் ஆதரவற்ற பெண்ணாக எங்களது தாயார் இறந்துபோனார்.

என்னையும் எனது சகோதரியையும் வளர்ப்பதற்காக அவர் மிகவும் கஷ்டப்பட்டார். சைக்கிளில் எங்கள் இருவரையும் பள்ளிக்கு எங்களது தாயார் அழைத்துச் செல்வது வழக்கம். எங்களை கைவிட்டபோதும் எனது தாயாரோ, எனது சகோதரியோ சித்துவிடம் சென்று உதவி கேட்கவில்லை” எனக் கண்ணீருடன் கூறியுள்ளார். மேலும், “கடந்த 1987-ம் ஆண்டு பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த சித்து, தனக்கு 2 வயதாக இருந்தபோது, தனது தாயும், தந்தையும் நீதிமன்றத்தின் வாயிலாக பிரிந்து விட்டதாக பொய்யான அறிக்கையை அளித்துள்ளார்” என சுமன் தூர் குற்றம் சாட்டியுள்ளார்.

சித்துவுக்கு உண்மையில் அப்போது 2 வயது இல்லை என்றுக் கூறி, குடும்பத்துடன் சித்து உள்ள கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்றை செய்தியாளர்களுக்கு சுமன் தூர் காட்டினார். நவ்ஜோத் சிங் சித்து, பத்திரிக்கைக்கு அளித்த தவறான தகவலை அடுத்து, லூதியானாவில் இருந்த அவரிடம் சென்று எனது தாயார் ஏன் பத்திரிக்கையில் பொய் சொன்னாய் என்று கேட்டார். ஆனால், அதற்கு நவ்ஜோத் சிங் சித்து, தான் அப்படி கூறவில்லை என்றும், பொய்யான தகவலை யாரோ எழுதியிருக்கிறார்கள் என்றும் எனது தாயாரிடம் கூறியதால், பின்னர் எனது தாயார் அந்த பத்திரிக்கையின் மீது வழக்கு தொடர்ந்தார் என்று சுமன் தூர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1989-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், நீதிமன்றத்தில் இருந்து திரும்பும் போது, டெல்லி ரயில் நிலையத்தில் ஒரு ஆதரவற்ற பெண்ணைப் போல, மூச்சுத் திணறி பரிதாபமாக, தனது தாயார் உயிரிழந்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். யாருக்கும் பிரித்து கொடுக்காமல், சொத்து முழுவதையும் தானே அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே, தனது தாயும் தந்தையும் பிரிந்துவிட்டதாக பொய்யாக கூறியதுடன், எங்களுக்கும் எதையும் கொடுக்காமல் பணம், பென்ஷன், நிலம், வீடு என அனைத்தையும், அனுபவிக்க சித்து எடுத்துக்கொண்டார் என்றும் சுமன் தூர் தெரிவித்துள்ளார்.

மேலும், சுமன் தூர் கூறுகையில், ''நாங்கள் மிகவும் கடினமான காலங்களை பார்த்திருக்கிறோம். என் அம்மா நான்கு மாதங்கள் மருத்துவமனையில் இருந்தார். நான் எதைக் கூறினாலும் அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. என்னுடைய தாய், தந்தையைப் பிரிந்துவிட்டதாகக் கூறுகிறார். அதற்கான ஆதாரத்தைக் கேட்கிறேன். பணத்துக்காக எனது சகோதரியை விரட்விட்டார்'' என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். சுமன் தூர் கடந்த‌ ஜனவரி 20-ம் தேதி, நவ்ஜோத் சிங் சித்துவைச் சந்திக்கச் சென்றதாகவும், ஆனால் இவரை சந்திக்க மறுத்துவிட்டதாகவும் சுமன் தூர் தெரிவித்துள்ளார். நவ்ஜோத்தை சந்திக்கவே பஞ்சாப் வந்ததாக அழுதுகொண்டே செய்தியாளர்களை சந்தித்தார்.

'நவ்ஜோத் சிங் சித்துவைத் தொடர்புகொள்ளும் முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து, நான் செய்தியாளர் சந்திப்பில் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர் என்னை போனில் பிளாக் செய்துவிட்டார். அவருடைய வேலைக்காரர்களும் கதவுகளைத் திறப்பதில்லை. என் அம்மாவுக்கு நீதி வேண்டும். எனக்கு சித்துவிடம் இருந்து பணமோ, வேறு எதுவுமே தேவையில்லை. எனக்கு 70 வயது. எங்கள் குடும்பத்தைப் பற்றிய இந்த விஷயங்களை தற்போது பொதுவெளியில் சொல்வது மிகவும் கடினமானது' என்று சுமன் ததூர் தெரிவித்துள்ளார். பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக நவ்ஜோத் சிங் சித்து தீவிரமாக வாக்கு சேகரித்து வரும் நிலையில், அவர் மீதான அவரின் சகோதரியின் குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுமன் தூரின் பரபரப்பு குற்றச்சாட்டு குறித்து, நவ்ஜோத் சிங் சித்தின் மனைவி நவ்ஜோத் கவுரிர் தெரிவிக்கையில், தனது கணவரின் தந்தைக்கு இருமுறை திருமணம் நடைபெற்றதாகவும், அதில் மூத்த மனைவியின் மூலம் 2 மகள்கள் இருப்பதாகவும், அந்த இரு மகள்கள் பற்றி அவ்வளவாக எனக்கும், எனது கணவருக்கும் தெரியாது என்று கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com