நாடாளுமன்ற கேன்டீனில் உணவுக்கான மானியம் ரத்து

நாடாளுமன்ற கேன்டீனில் உணவுக்கான மானியம் ரத்து
நாடாளுமன்ற கேன்டீனில் உணவுக்கான மானியம் ரத்து

வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலிருந்து கேன்டீனில் உணவுக்கான மானியம் நிறுத்தப்படுவதாக நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இதனால் உணவுக்கான விலையும் ஏற உள்ளதாம். இந்த கேன்டீனில் உணவின் விலை மிகக் குறைவாக இருப்பது பல நேரங்களில் பேசு பொருளானது. மக்களின் வரிப்பணத்தில் மலிவான விலையில் உணவு சாப்பிடுவதா என்ற விமர்சனமும் சமயங்களில் எழுப்பப்பட்டன. 

இந்த உணவு மானியத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்லாது நாடாளுமன்ற அலுவலக ஊழியர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் என அனைவரும் இங்குதான் உணவு சாப்பிடுவதாக இந்த விமர்சனத்திற்கு விளக்கம் கொடுக்கப்பட்டது. 

கடந்த 2019-இல் உணவுக்கான மானியத்தை அகற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக முடிவு செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

உண்மையில் நாடாளுமன்ற கேன்டீனில் உணவுகளின் விலை என்ன? அதற்காக அரசு எவ்வளவு செலவு செய்கிறது?

உணவுக்கான மானியத்தை நிறுத்திக் கொள்வதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்திருந்தாலும் அதற்காக அரசு எவ்வளவு செலவு செய்கிறது எனபதை குறிப்பிட மறுத்துவிட்டார். அதோடு இந்த நடவடிக்கையின் மூலம் அரசுக்கு எவ்வளவு பணம் மிச்சமாகும் என்பதையும் குறிப்பிட மறுத்து விட்டார். 

இருப்பினும் PTI செய்தி நிறுவனம் இந்த நடவடிக்கையின் மூலம் அரசு 8 கோடி ரூபாயை மிச்சப்படுத்தும் எனத் தெரிவித்துள்ளது. வடக்கு ரயில்வே மூலமாக கடந்த 52 ஆண்டுகளாக இந்த கேன்டீன் இயங்கி வருகிறது. ஆண்டுக்கு 15 முதல் 18 கோடி ரூபாய் வரை இந்த கேன்டீன் மூலம் லாபம் ஈட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முதல் இந்திய சுற்றுலா மேப்பாட்டு நிறுவனம் கேன்டீன் பொறுப்பை கவனிக்க உள்ளது. மானியமாக பெறப்படும் 14 கோடி ரூபாயில் பெரும்பாலான தொகை ஊழியர்களின் ஊதியத்திற்காக செலவு செய்யப்படுவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

2016-க்கு பிறகு “லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை” என்ற நோக்கத்துடன் கேன்டீன் இயங்கி வருகிறது. இதற்காக உணவின் விலையிலும் அப்போது மாற்றம் செய்யப்பட்டன. இந்த நிலையில்தான் 2019இல் உணவுக்கான மானியம் நிறுத்தப்படுவதாக அறிவித்தார் ஓம் பிர்லா. அதற்கு அப்போது காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டது. பத்திரிகையாளர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான நாடாளுமன்ற ஊழியர்களும் பாதிக்கப்படுவர் என சொல்லியதும் குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com