‘பாராட்டுவதென்றால் ஏர் இந்தியாவை விற்கவேண்டாமென சொல்லுங்கள்’: பிரதமருக்கு சுப்பிரமணியன் சுவாமி அறிவுறுத்தல்

‘பாராட்டுவதென்றால் ஏர் இந்தியாவை விற்கவேண்டாமென சொல்லுங்கள்’: பிரதமருக்கு சுப்பிரமணியன் சுவாமி அறிவுறுத்தல்

‘பாராட்டுவதென்றால் ஏர் இந்தியாவை விற்கவேண்டாமென சொல்லுங்கள்’: பிரதமருக்கு சுப்பிரமணியன் சுவாமி அறிவுறுத்தல்
Published on

ஏர் இந்தியாவை பாராட்டுகிறீர்கள் என்றால், அதனை விற்பனை செய்யும் முடிவை கைவிடச் சொல்லுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்புள்ள சீனாவின் வுஹான் மாகாணத்தில் சிக்கித் தவித்த இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் துணிச்சலாகச் சென்று மீட்டு வந்தது. ஏர் இந்தியாவின் இந்த செயலை பிரதமர் மோடி நேற்று பாராட்டியிருந்தார். இதுதொடர்பாக ஏர் இந்தியா மற்றும் சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அதில், துணிச்சலாக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அதிகாரிகளை பிரதமர் பாராட்டியுள்ளார்.

இந்நிலையில், ஏர் இந்தியா அதிகாரிகளை பிரதமர் மோடி பாராட்டியுள்ளது குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “சீனாவின் வுஹான் மாகாணத்திலிருந்து இந்தியர்களை ஏர் இந்தியா தைரியமான முயற்சிகள் மேற்கொண்டு அழைத்து வந்ததை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார் என்று டிவி சேனல்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. “நன்று, ஏர் இந்தியாவை விற்கும் முயற்சிகளைக் கைவிடுமாறு மத்திய விமான போக்குவரத்து அமைச்சரவைக்கு பிரதமர் மோடி அறிவுறுத்த வேண்டிய நேரம் இது” - அதுதான் நீங்கள் சொன்னதற்கு அர்த்தம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஏர் இந்தியாவின் பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்யும் முடிவிற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற அவசரக் காலங்களில் அரசின் விமானச் சேவைதான் பயன்பட்டுள்ளது என்று பலரும் தெரிவித்தனர். அதேபோல், ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவை சுப்பிரமணியன் சுவாமியும் தொடர்ந்து எதிர்த்து வருகிறார். அரசின் முடிவுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் எனவும் அவர் கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com