உத்தரகாண்ட்| அரசு மருத்துவக் கல்லூரி தனியாரிடம் ஒப்படைப்பு.. மாணவர்கள் போராட்டம்!
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. அம்மாநில முதல்வராக புஷ்கர் சிங் தாமி உள்ளார். இந்த நிலையில், உத்தரகாண்ட் அரசாங்கம், கடந்த ஜனவரி 7ஆம் தேதி ஹரித்வார் அரசு மருத்துவக் கல்லூரியை தனியாரிடம் ஒப்படைப்பதாக அறிவித்தது. கல்லூரி மருத்துவமனையில் சிறந்த மேலாண்மை மற்றும் மருத்துவ வசதிகளுக்காக இதைத் தனியாரிடம் ஒப்படைப்பதாக அது கூறியது. இதற்கு மருத்துவக் கல்வி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, அரசின் இந்த முடிவை எதிர்த்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தாமி அரசு தனது முடிவை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
”கல்லூரியை நிர்வகிக்கும் நிறுவனம் எதிர்காலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் விருப்பம் மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப கட்டணத்தை உயர்த்துவதால், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை அவர்களின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் அழிக்கும்” என அவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மாணவர்கள் டேராடூன் செல்ல முயன்றனர். ஆனால், அவர்களைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். தவிர, அவர்கள் கல்லூரி வளாகத்தில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மாணவர்களுக்கும் அரசுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்துள்ளது.