திக் திக் திகில் பயணம்: ஆபத்தான பாலத்தில் அச்சத்துடன் ஆற்றை கடந்து செல்லும் மாணவர்கள்!
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பின்பும் சுதந்திர தின அமிர்தப் பெருவிழா கொண்டாடி வரும் வேலையிலும், மக்களது அடிப்படைத் தேவைகள் நிறைவேறாத வண்ணமே உள்ளது. சாலை வசதிகள் இல்லாமல் பச்சிளம் குழந்தைகளை சாகக் கொடுத்தும். மருத்துவ வசதிகள் இல்லாமல், குடிநீர் இல்லாமல், மின்சாரம் இல்லாமல் இன்னும் ஏகப்பட்ட இல்லாமல்கள் இருந்தும், அதை எதிர்த்துக் குரல் கொடுத்து அதற்காக போராடி சில உயிர்களை காப்பற்ற முடியாமல் தியாகம் செய்துதான் ஒவ்வொரு வசதிகளையும் வாங்க வேண்டியுள்ளது.
மத்திய பிரதேசம் அசோக் நகர் மாவட்டத்தில் உள்ள துமின் கிராமமும் அப்படியான ஒரு நிலையில்தான் உள்ளது. படிப்பு முக்கியம் என சொல்லும் அரசுகள், பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்கும் அரசுகள், மாணவர்களை பள்ளிக்குக் கொண்டுவர நினைக்கும் அரசுகள், அதற்கான அடிப்படை தேவைகளை செய்து கொடுக்கிறதா என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறி.
கிராமம், ஆறு, ஆற்றைக் கடந்தால் பள்ளி, கல்லூரி. மக்களது வாழ்வை மேம்படுத்தும் இன்னும் பிற இடங்கள். எத்தனை இருந்தும் என்ன, ஆற்றைக் கடக்க வேண்டுமே. துமின் கிராமத்தில் உற்பத்தியாகும் ஆறு, திருவேணி. மழைக் காலத்தில் இப்பகுதியில் கட்டப்பட்டுள்ள பாலத்தை தொடும் அளவு தண்ணீர் செல்லும். தாய் தனது பிள்ளைகளிடம் கவனமாக படிக்க வேண்டுமென சொன்னால், இங்கிருக்கும் தாய்மார்கள் கவனமாக ஆற்றைக் கடக்க வேண்டுமென்றே சொல்லியிருப்பார்கள்.
துமின் கிராமத்தில் மழைக்காலம் வந்தாலே மக்களுக்கு பெரும் துயரமும் உடன் வரும். ஏனெனில் கிராம மக்கள் ஆற்றைக் கடக்க வேண்டுமானால் அவர்களுக்கு இந்த பாலம் மட்டுமே ஆதரவு. கயிறு மற்றும் பலகைகளை மட்டுமே கொண்டு தற்காலிகத் தேவைக்காக கட்டப்பட்ட பாலம் நிரந்தரமானபோது, மக்களது பயமும் நிரந்தரமானது. பாலம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம். யார் வேண்டுமானாலும் ஆற்றில் அடித்துச் செல்லப்படலாம். ஆனாலும் பாலத்தை கடந்துதான் தீர வேண்டும்.
பள்ளிக்கும், கல்லூரிக்கும், வேலைக்கும் செல்ல வேண்டுமே. கிராம மக்கள் பலமுறை அரசு நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிராமத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள பள்ளிக்குச் செல்ல வேண்டுமானால் பாலம் ஒன்றுதான் தீர்வு. ஆற்றில் தண்ணீர்வரத்து அதிகமானால் பள்ளிக்கும் வேலைக்கும் அவசரத் தேவைக்கும் மருத்துவமனைக்கும் செல்ல முடியாத சூழல் ஏற்படும். 5 கி.மீ பயணத்தை சேமிக்கும் என்பதால் இது ஒன்றே தீர்வு.
இதுகுறித்து அப்பகுதி அரசு அதிகாரிகள் கூறுகையில், நேரம் கிடைத்தவுடன் பாலத்தை சீரமைப்பதாக சொன்னார்கள். அவர்களுக்கு நேரம் கிடைக்கும் வரையில் பாலம் உடையாமலும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமலும் இருந்தால் அதுவே போதும்.