”நீங்கள்தான் தேர்ந்தெடுத்தீர்கள்”..உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் குறித்து நீதிபதி

”நீங்கள்தான் தேர்ந்தெடுத்தீர்கள்”..உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் குறித்து நீதிபதி
”நீங்கள்தான் தேர்ந்தெடுத்தீர்கள்”..உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் குறித்து நீதிபதி

போர் காரணமாக உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள், இந்தியாவிலேயே தங்களது படிப்பை தொடர அனுமதி கோரி தொடர்ந்த மனுமீது பதில் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் தேசிய மருத்துவ கமிஷனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

உக்ரைன் நாட்டில் படித்து வந்த சுமார் 22,000 இந்திய மாணவர்கள், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையான போர் காரணமாக கட்டாயமாக அந்நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் அவர்களது எதிர்காலமும், மருத்துவ படிப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் சில மாணவர்கள் சார்பாக பொதுநல மனு என்பது தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுமிதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா தலைமையிலான அமரும் முன்பு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்தியாவில் இடம் கிடைக்காததன் காரணமாகத்தான் வெளிநாட்டிற்கு சென்று படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், தற்பொழுது இவர்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள சூழலில், இந்தியாவில் படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி 22 ஆயிரம் மாணவர்களையும் இந்தியாவிலேயே படிக்க வைக்கும் அளவிற்கு நம்மிடம் வசதிகள் இருக்கிறதா என்பது சந்தேகமாக தான் இருக்கிறது என கூறினார்.

அதற்கு பதில் அளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் முதலாமாண்டு படிக்கும் மாணவர்களை இந்தியாவில் படிப்பை தொடர அனுமதிக்கக்கோரவில்லை என்றும், இறுதியாண்டு படிக்கக்கூடிய மாணவர்களையாவது இந்தியாவில் படிக்க அனுமதிக்க வேண்டும் என கேட்பதாக கூறினார். இதனை அடுத்து மத்திய அரசு மற்றும் தேசிய மருத்துவ கமிஷன் ஆகியவை பதிலளிக்குமாறு கூறி நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை செப்டம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதனிடையே விசாரணையின் போது,

”நீதிபதி: உக்ரைன் மக்கள் அங்கு வாழ்கிறார்கள், மக்கள் நாட்டை விட்டு வெளியேறவில்லையே

மாணவர்கள் தரப்பு: உக்ரைன் மக்களுக்கு வேறு வழியில்லை.

நீதிபதி: நீங்கள் தான் கல்வியை விட வாழ்க்கை என தேர்ந்தெடுத்தீர்கள்”, என நீதிபதி தெரிவித்தார்

- நிரஞ்சன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com