பள்ளியில் விளையாடும் போது சிறுவனை பாம்பு கடித்ததா ? - கேரளாவில் மற்றொரு சம்பவம்
கேரளாவில் பள்ளியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் பாம்பு கடித்ததாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கேரள மாநிலம் சாலக்குடியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருபவர் ஜெரால்டு (9). இச்சிறுவன் பள்ளியின் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென காலில் ஏதோ கடித்தது போல் உணர்ந்தார். பின்னர் காலனிகளை கழற்றி பார்த்தபோது காலில் பாம்பு கடித்தது போன்ற தழும்பும், இரத்த கசிவும் இருப்பதையும் கண்டார். அங்கிருந்த உடல் பயிற்சி ஆசிரியர் இத்தகவலை ஜெரால்டின் தந்தைக்கு தெரிவித்ததுடன், சிறுவனை அவசரமாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
பின்னர் சிறுவனை அங்கிருத்து அனகமலியில் உள்ள வோறொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சிறுவனை பரிசோதித்த பின்னர், “சிறுவனின் காலில் ஏதோ கடித்து உள்ளது. அதனால் அவரது காலில் வீக்கத்துடன் அரிப்பும் ஏற்பட்டிருக்கிறது. சிகிச்சையின் முடிவில் அவரின் உடம்பில் எந்த விஷமும் இல்லை” என்று சிறுநீரக மருத்துவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வயநாட்டில் பத்து வயது சிறுமி பள்ளியில் இருந்த போது பாம்பு கடித்து இறந்தபோன சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.