உதவித்தொகை இல்லை, லேப்டாப் இல்லை, விடுதியும் இல்லை - மனமுடைந்த மாணவி தற்கொலை!

உதவித்தொகை இல்லை, லேப்டாப் இல்லை, விடுதியும் இல்லை - மனமுடைந்த மாணவி தற்கொலை!

உதவித்தொகை இல்லை, லேப்டாப் இல்லை, விடுதியும் இல்லை - மனமுடைந்த மாணவி தற்கொலை!
Published on

ஆந்திராவில் படிப்பதற்கு எந்த வசதியும் இல்லாததால் பெற்றோருக்கு பாரமாக இருப்பதாக எண்ணிய மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

’’என்னுடைய குடும்பம் எனக்கு நிறைய செலவு செய்துள்ளது. அவர்களுக்கு நான் பாரமாக உள்ளேன். என் படிப்பும் அவர்களுக்கு பாரமாக உள்ளது. ஆனால் என்னால் படிப்பு இல்லாமல் வாழமுடியாது. இதை நான் சில நாட்களாக சிந்தித்துப் பார்த்தேன். இதற்கு தற்கொலை மட்டுமே சிறந்த தீர்வாக இருக்கும் என நினைக்கிறேன்’’ இவ்வாறு தெலுங்கில் எழுதப்பட்டிருந்தது 19 வயதான ஐஸ்வர்யா ரெட்டியின் கடைசி வார்த்தைகள்.

லேடி ஸ்ரீராம் பெண்கள் கல்லூரியில் உதவித்தொகை பெற்று கணிதம் இளநிலை பட்டப்படிப்பை படித்துவந்தார் ஐஸ்வர்யா. ஊரடங்கு ஆரம்பித்ததிலிருந்து தெலங்கானாவில் தனது குடும்பத்தினருடன் வசித்துவந்துள்ளார் ஐஸ்வர்யா. தினசரிக்கூலி வேலைசெய்யும் இவரின் பெற்றோர்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்கே கஷ்டப்பட்டு வந்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஐஸ்வர்யா தனது படிப்பை தொடரவேண்டும் என ஆசைப்பட்ட அவரது பெற்றோர்கள் வீட்டை அடமானம் வைத்து கல்லூரி கட்டணம் செலுத்தியுள்ளனர். மேலும் குடும்ப வறுமை காரணமாக ஐஸ்வர்யாவின் இளைய சகோதரியும் படிப்பை கைவிட்டுள்ளார்.

கஷ்டம் மேல் கஷ்டம் வந்து சேருவதைப்போல், முதலாமாண்டு மாணவிகளுக்கு மட்டுமே விடுதி என கடந்த ஆண்டே கூறியிருந்த நிலையில், ஏற்கெனவே விடுதியில் தங்கியிருந்த மாணவிகளை தனியாக அறை எடுத்துத் தங்கிக்கொள்ளுமாறு அக்டோபர் 31ஆம் தேதி கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு கல்லூரியில் மாணவிகளிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியபோதும் நிர்வாகம் அதை நிராகரித்துள்ளது.

கல்லூரியிலிருந்து இந்த அறிவிப்பு வந்ததிலிருந்தே ஐஸ்வர்யா மிகவும் பதற்றத்துடன் இருந்ததாக அவருடைய தாயார் தெரிவித்துள்ளார். மேலும் அதற்கு பணத்திற்கு எங்கே செல்வோம் என தன்னிடம் கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார். காரணம் அந்த கல்லூரிக்கு அருகிலுள்ள அறைகளில் மாத வாடகை ரூ. 12 ஆயிரத்திலிருந்து ரூ.18 ஆயிரம்வரை இருக்கும் எனவும் கூறி புலம்பியிருக்கிறார். மேலும் விடுதி வார்டனிடம் பலமுறை கேட்டுப்பார்த்தும் அவர் நிராகரித்து விட்டதாக தோழிகள் கூறியுள்ளனர்.

ஐஸ்வர்யாவிடம் லேப்டாப் இல்லாததால், தினசரி ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்வதிலும் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. ஆசிரியர்கள் தினமும் வருகைப்பதிவு எடுத்ததால் கட்டாயம் வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. போதுமான நெட் வசதி இல்லாததால், 8 மணிநேர வகுப்புகளில் ஐஸ்வர்யா 3 மணிநேரம்தான் கலந்துகொண்டதாகவும் அவருடைய தோழிகள் கூறியுள்ளனர்.

இவை அனைத்திற்கும் மேலாக அவருக்கு வரவேண்டிய உதவித்தொகையில் ஒரு ரூபாய்கூட வராதது அவரை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. இதனால் மனமுடைந்த அவர் தனது குடும்பத்திற்கு தான் பாரமாக உள்ளதாக ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நவம்பர் 8ஆம் தேதி, அதாவது ஐஸ்வர்யா இறந்து கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, கல்லூரி நிர்வாகம் தங்கள் இரங்கல் கடிதத்தை அனுப்பியுள்ளது. அதில் தங்கள் குடும்பநிலை குறித்து, ஐஸ்வர்யா யாரிடமும் எந்த உதவியும் கேட்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் ஐஸ்வர்யாவின் நண்பர்களும், வகுப்பு மாணவிகளும் இது உண்மையில்லை எனக் கூறி மறுத்து, நிர்வாகத்தின் இந்த நடத்தைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாணவிகள் ஊரடங்கு நேரத்திலும் பலமுறை கல்லூரி பிரின்சிபலை சந்திக்க முயற்சி செய்ததாகவும், ஆனால் நிர்வாகம் ஒருமுறைகூட தங்களுக்கு பதிலளிக்கவில்லை என ஒரு மாணவி கூறியுள்ளார்.

கல்லூரி நிர்வாகத்தின் இந்த நடத்தைக்குறித்து கோபமடைந்த மாணவிகள், நவம்பர் 9ஆம் தேதி சமூக ஊடகங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கல்லூரியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை முன்பு ஒன்றுகூடி, உதவித்தொகையை தருமாறும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐஸ்வர்யாவுக்கு நீதிகிடைக்கவேண்டும் என சமூக ஊடகங்களில் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com