ஜெய்ப்பூர்: கடன் தொல்லை? தொழிலதிபர் குடும்பத்துடன் தற்கொலை

ஜெய்ப்பூர்: கடன் தொல்லை? தொழிலதிபர் குடும்பத்துடன் தற்கொலை
ஜெய்ப்பூர்: கடன் தொல்லை? தொழிலதிபர் குடும்பத்துடன் தற்கொலை

பொருளாதார நெருக்கடியால் ஜெய்ப்பூரை சேர்ந்த தங்கவர்த்தக தொழிலதிபர் தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஜம்தோலி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்குபேர் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு அவர்களது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. தங்க வர்த்தகர் யஷ்வந்த் சோனி, அவரது மனைவி மம்தா மற்றும் அவர்களது மகன்கள் அஜித், பாரத் ஆகியோர்தான் தற்கொலை செய்து கொண்டனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த குடும்பம் ஜம்தோலி பகுதியின் ராதா விஹார் காலனியில் வசித்து வந்துள்ளனர். சனிக்கிழமை சோனியின் சகோதரர் அவர்களது வீட்டிற்குச் சென்றபோது வீட்டில் யாரும் கதவை திறக்காததால், அவர் சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்தை அடைந்து இறந்த நான்கு பேரின் சடலங்களையும் கண்டறிந்தனர். சோனியும் அவரது மகன்களும் ஒரு அறையின் மின்விசிறிகளில் தூக்கில் தொங்கிய நிலையிலும், அவரது மனைவி மம்தா தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையிலும் காணப்பட்டார். மம்தாவின் கண்கள் மூடியிருந்தன, மகன்களின் கால்கள் கட்டப்பட்டிருந்தன.

காவல்துறை கூடுதல் அதிகாரி மனோஜ் சவுத்ரி கூறுகையில் “ இறந்தவரின் வீட்டில் இருந்து ஒரு தற்கொலைக் குறிப்பு எடுக்கப்பட்டுள்ளது. அதில் சோனி தான் நிதி ரீதியாக சிரமப்படுவதாக ஒப்புக் கொண்டு, ராஜேந்திரா என்ற நபரைக் குற்றம் சாட்டியுள்ளார். சோனி சிலரிடமிருந்து கடன் வாங்கியதால் அதை திருப்பித் தர முடியவில்லை என்று கூறப்படுகிறது. இவர் மற்றவர்களுக்கும் கொஞ்சம் பணம் கொடுத்துள்ளார், ஆனால் அதை திரும்பப்பெற முடியவில்லை. சோனி எவ்வளவு பணம் கடன் வாங்கினார், எவ்வளவு கடன் கொடுத்தார் என்பது விசாரணையில் தெளிவாகிவிடும், ஆனால் முதன்மை விசாரணையில் மொத்த தொகை சுமார் 1 கோடி ரூபாய் இருக்கலாம் என்று தெரிகிறது” என்று கூறினார்.

 சில நாட்களுக்கு முன்பு 3,4 நபர்கள் அந்த பகுதிக்கு வந்து இக்குடும்பத்திடம் கடனை திரும்பக்கேட்டு அவமரியாதை செய்ததாகவும், அதன் காரணமாகவே இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று பக்கத்து வீட்டுக்காரர் குற்றம் சாட்டினார். இறந்த பிறகு, 3 பேர் பணம் கோரி இறந்தவரின் வீட்டிற்கு வந்தனர். மூவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com